கரும்பு டன் ஒன்றுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தி உடுமலைப்பேட்டையில் வரும் 25ஆம் தேதி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரும்பு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் வழங்க மாநில அரசு முன் வரவேண்டும். கரும்பு வெட்டுக்கூலி கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரூ.60-க்கு மேல் கூடியிருக்கிறது. தானாகவே காடுகளில் வளரும் கருவேல மர விறகுகளுக்கு கூட ஒரு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் விலை கிடைக்கிறது. ஆனால் கடன் வாங்கி முதலீடு செய்து, கஷ்டப்பட்டு விளைவிக்கும் கரும்புக்கு குறைந்தபட்சம் ரூ.2 ஆயிரம் வழங்குவதில் தவறில்லை.
எனவே, இந்த ஆண்டு மத்திய அரசு ஒரு டன் ஒன்றுக்கு ரூ.1,550 நிர்ணயம் செய்திருக்கின்ற நிலையில், ரூ.450 சேர்த்து டன் ஒன்றுக்கு ரூ.2 ஆயிரம் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். 2000-2001 ஆண்டிலேயே தமிழக அரசு அதிகப்பட்சமாக ரூ.407 சேர்ந்திருக்கும் பொழுது தற்சமயம் கரும்பு விவசாயிகளின் நலன் கருதி ரூ.450 சேர்த்து கொடுப்பது நியாயமே.
தனியார் சர்க்கரை ஆலைகள், கரும்பு ஏற்றி வரும் லாரி, டிராக்டர்களுக்கு வாடகை கொடுக்க மறுத்து வருகிறது. எனவே, விவசாயிகளுக்கு வாடகை தருவதற்கு, தனியார் ஆலை உரிமையாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். அத்துடன் கரும்பு சப்ளை செய்ததற்குரிய தொகையை கணக்கீட்டு வழங்குவதில் ஒவ்வொரு ஆலையிலும் ஒவ்வொரு நடைமுறை இருந்து வருகிறது.
அவற்றையெல்லாம் முறைப்படுத்தி, அரசு மற்றும் தனியார் சர்க்கரை ஆலைகள் அனைத்திலும் கரும்பு வழங்கப்பட்ட 15 தினங்களுக்குள் விவசாயிகளுக்கு அதற்குரிய தொகை கிடைக்க செய்ய வேண்டும் என ஏற்கனவே அரசை வலியுறுத்தி இருந்தோம். கரும்பு விவசாயிகளும் தொடர்ந்து போராடி வருகிறார்கள். அவர்களது குரல் மத்திய, மாநில அரசுக்கு இன்னும் எட்டவில்லை.
எனவே கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வற்புறுத்தி கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் வருகிற 25ஆம் தேதி எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.