லாரி உரிமையாளர்கள் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டதால் 8வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நீடித்தது வருகிறது. தமிழ்நாட்டில் லாரிகள் வேலை நிறுத்தத்தால் பால், தண்ணீர் சப்ளையில் பாதிப்பு இல்லை.
டீசல் விலையை குறைக்க வேண்டும் என்பது உட்பட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் கடந்த 5ஆம் தேதி முதல் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர். 8வது நாளாக இன்றும் வேலை நிறுத்தம் நீடித்து வருகிறது.
இதனால் பல மாநிலங்களிலும் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சரக்குகள் தேங்கியுள்ளன. அத்தியாவசிய பொருட்களின் விலை 10 முதல் 15 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது.
போராட்டத்தை கைவிடாவிட்டால், எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து சங்க தலைவர் சரண் சிங் லோக்ரா, செயலாளர் வேணுகோபால் உட்பட பலர் எஸ்மா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.
'கைது பற்றி கவலைப்படமாட்டோம். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை’ என்று அகில இந்திய மோட்டார் வாகன போக்குவரத்து சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட தலைவர்களை விடுவிக்காமல் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், லாரிகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரவும், வேலை நிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள நிலைமையை ஆய்வு செய்யவும், மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர்கள் கூட்டத்தை டெல்லியில் மத்திய அரசு இன்று கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில் வேலை நிறுத்தம் குறித்து விவாதிப்பதுடன், பிரச்சனைக்கு தீர்வு காண்பது பற்றியும் ஆய்வு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை சால்ட் குவாட்டர்ஸ் பகுதியில் இருந்து இயக்கப்படும் ரயில்வே குட்ஷெட் லாரிகளும் இயங்காமல் தொடர்ந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளது. இதன் காரணமாக ரயிலில் இருந்து வரும் அரிசி, நெல், கோதுமை, சிமெண்ட் ஆகியவை கொண்டுசெல்ல முடியாமல் தேங்கிக்கிடக்கிறது. சென்னை, காஞ்சிபுரம் மாவட்ட லாரி, டேங்கர் டிப்போ, டிரெய்லர், லாரிகள் சங்க செயலாளர் யுவராஜ் இன்று முதல் போராட்டம் மேலும் தீவிரம் அடையும் என்று கூறினார்.
இந்த நிலையில் லாரி அதிபர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து பால்-தண்ணீர், மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏற்றிச்செல்லும் லாரிகள் ஓடாது என்று அறிவித்திருந்தனர்.
அத்தியாவசிய பொருட்களை தடுத்தால் எஸ்மா சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்படுவார்கள் என்று மத்திய அரசு எச்சரிக்கை செய்துள்ளது. இதனால் குடிநீர், பால் லாரி வைத்திருப்பவர்கள் வழக்கம்போல் லாரிகளை இயக்கினார்கள். எனவே தமிழ்நாட்டில் பால், குடிநீர், மருந்து சப்ளையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.