திருமங்கலம் இடைத் தேர்தல்: 74 விழுக்காடு வாக்குப் பதிவு!
வெள்ளி, 9 ஜனவரி 2009 (18:47 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு இன்று நடந்து முடிந்த இடைத் தேர்தலில் 74 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குபதிவு இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. ஓரிரு சிறு சம்பவங்களைத் தவிர, பொதுவாக அமைதியுடன் தேர்தல் நடந்து முடிந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை 4 மணி வரை 60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் உறுதி செய்துள்ளன. கடைசி ஒரு மணி நேரத்திலும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக இருந்துள்ளதெனவும், மொத்தத்தில் 74 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதெனவும் பொதுவான தகவல்கள் தெரிவிக்கின்றன.
தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம், தே.மு.தி.க. வேட்பாளர் தனபாண்டியன் ஆகியோர் இடையேதான் போட்டி நிலவுகிறது.
வாக்குப் பெட்டிகள் மதுரை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்படுகின்றன. வரும் 12ஆம் தேதி திங்கட் கிழமை வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.