திருமங்கலம் இடைத்தேர்தல்: மதியம் 1 மணிவரை 40 விழுக்காடு வாக்குப் பதிவு!

வெள்ளி, 9 ஜனவரி 2009 (13:57 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் மதியம் 1 மணிக்குள் 40 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளது.

இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு துவங்கியது. ஆனால் பல வாக்குச் சாவடிகளில் காலை 6.30 மணி முதலே வாக்காளர்கள் வரிசையில் நின்று வாக்குச் சாவடி திறப்பதற்காக காத்து நின்றனர். இதனால் வாக்குப் பதிவு துவக்கத்திலிருந்தே விறுவிறுப்பாக இருந்தது.

முதல் 1 மணி நேரத்திலேயே 12 விழுக்காடு வாக்குகள் பதிவானது. அதன் பிறகும் வாக்குப் பதிவு சுறுசுறுப்பாகவே இருந்தது. கடைசியாகக் கிடைத்த தகவலின்படி, 4 மணி நேரத்தில் 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக வாக்குப் பதிவு நடந்துள்ளது.

இன்று மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்பதால் முன்பு எப்போதும் காணாத அளவிற்கு மிக அதிகபட்சமாக வாக்குப் பதிவு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. வேட்பாளர் லதா அதியமான், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம், தே.மு.தி.க. வேட்பாளர் தனபாண்டியன் ஆகியோருக்கு இடையே பலத்த போட்டி நிலவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்