திருமங்கலத்தில் இன்று நடைபெறும் இடைத்தேர்தலில் பொதுமக்கள் காலை முதலே வாக்குச்சாவடிக்கு வந்து ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர். பொதுமக்கள் அச்சமின்றி விறுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.
வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை முதலே பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டைகள் மற்றும் தேர்தல் ஆணையம் அனுமதித்த சீட்டுக்களுடன் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர்.
190 வாக்குச்சாவடிகளில் விறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அனைத்து வாக்குச்சாவடி வளாகத்திலும், வெளியிலும் இயந்திர துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
வலையங்குளத்தில் காலை 7 மணிக்கு முன்பே வாக்காளர்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன் திரண்டு நின்றனர். வாக்குச் சாவடியில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு வாக்காளர்களை தவிர யாரையும் துணை ராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.
காலை 9.30 மணி வரை 12 விழுக்காடு வாக்குப்பதிவு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாக்குப்பதிவினை பார்வையிடுவதற்காக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று காலை திருமங்கலம் வந்தார். ஓட்டுப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடிகளுக்கு சென்று பார்வையிட்டார்.
ஓட்டுப்பதிவு அமைதியாக நடக்கிறதா? மின்னணு இயந்திரங்களில் ஏதாவது குறைபாடுகள் ஏற்பட்டதா? என்று வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அவ்வாறு மின்னணு எந்திரத்தில் ஏதாவது கோளாறு ஏற்பட்டால் உடனடியாக மாற்று இயந்திரம் மூலம் வாக்குப்பதிவை நடத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஓட்டுப்பதிவு முடியும் வரை துணை ராணுவப்படையினர் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிகிறது.
வாக்குப்பதிவு முடிந்ததும் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துணை ராணுவ பாதுகாப்புடன் மதுரை மருத்துவ கல்லூரிக்கு கொண்டுவரப்படும்.
வரும் 12ஆம் தேதி காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. பிற்பகலுக்குள் முழு முடிவும் வெளியாகும் என்று தெரிகிறது.