4வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம்: பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு அபாயம்
வியாழன், 8 ஜனவரி 2009 (12:19 IST)
4வது நாளாக லாரிகள் வேலை நிறுத்தம் நடந்து வருவதால் தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.), இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உட்பட 14 பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களில் பணிபுரியும் 55 ஆயிரம் அதிகாரிகள் தற்போதைய வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதனால் தமிழ்நாட்டில் நரிமணம், ஆந்திராவில் ராஜமுந்திரி, மும்பை போன்ற இடங்களில் கச்சா எண்ணெய் எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, கொச்சி, மங்களூர் போன்ற இடங்களில் உள்ள பெட்ரோலிய சுத்திகரிப்பு நிறுவனங்களிலும் பணிகள் முடங்கியுள்ளன.
அதிகாரிகளின் வேலைநிறுத்தத்தால், பெட்ரோலியப் பொருள் நிரப்பும் நிலையங்களிலும் நேற்று காலை 6 மணி முதல் பணிகள் முற்றிலுமாக முடங்கின. இதனால் நூற்றுக்கணக்கான டேங்கர் லாரிகள் எரிபொருளை நிரப்பமுடியாமல் காத்துக் கிடக்கின்றன.
பெட்ரோல், டீசல் சப்ளை நிறுத்தப்பட்டதால், சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று காலையில் இருந்தே ஆங்காங்கே பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. பல இடங்களில் 'பெட்ரோல்-டீசல் இல்லை’ என்று போர்டு எழுதி வைத்திருந்தனர். சமையல் எரிவாயுவுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டுள்ளது.
டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக பிற மாவட்டங்களுக்கு பெட்ரோல், டீசல் சப்ளையில் ஏற்கனவே பாதிப்பு இருந்தது. இந்நிலையில், எண்ணெய் நிறுவன அதிகாரிகளின் போராட்டம் தொடங்கிவிட்டது.
மதுரை, நெல்லை, தேனி, நாகை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. போராட்டம் தொடர்ந்தால், மற்ற மாவட்டங்களிலும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்று பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
பெட்ரோல், டீசல் பில்லிங் நிலையங்களான திருச்சி, கரூர், சங்ககிரி, மதுரை, நெல்லை, கோவை, நரிமணம் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் பணிகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.