விரைவில் பிரணாப்பை இலங்கைக்கு அனுப்பி வைப்பேன்: கருணாநிதியிடம் பிரதமர் உறுதி
வியாழன், 8 ஜனவரி 2009 (09:20 IST)
''எவ்வளவு விரைவில் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப இயலுமோ அவ்வளவு விரைவில் அனுப்பி வைப்பதாகவும் பிரதமர் மன்மோகன்சிங், முதலமைச்சர் கருணாநிதியிடம் உறுதி அளித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழக முதலமைச்சர் கருணாநிதி நேற்றிரவு ஆளுநர் மாளிகையில் பிரதமர் மன்மோகன்சிங்கை சந்தித்து பேசினார். அப்போது தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைத்தார்.
இறுதியாக இலங்கைப் பிரச்சனை குறித்து எடுத்துக்கூறி, மத்திய அரசு ஏற்கனவே ஒப்புக்கொண்டவாறு மத்திய அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி எப்போது இலங்கைக்கு செல்கிறார்? என்பது பற்றியும், இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்தும் கருணாநிதி எடுத்துக்கூறினார்.
முதலமைச்சர் கருணாநிதியின் உணர்வை புரிந்து கொள்வதாகவும், எவ்வளவு விரைவில் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப இயலுமோ அவ்வளவு விரைவில் அனுப்பி வைப்பதாகவும் பிரதமர் மன்மோகன்சிங் முதலமைச்சர் கருணாநிதியிடம் உறுதி அளித்துள்ளதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.