சென்னையில் வரும் 8ஆம் தேதி தொடங்கும் புத்தக கண்காட்சியில் ஒரு கோடி புத்தகங்கள் விற்பனைக்கு வருகிறது என்று சென்னை தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்க தலைவர் சாந்தி கண்ணதாசன், செயலர் ஆர்.எஸ்.சண்முகம் ஆகியோர் தெரிவித்தனர்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட்ஜார்ஜ் ஆங்கிலோ பள்ளி மைதானத்தில் 32வது புத்தக கண்காட்சி வரும் 8ஆம் தேதியில் இருந்து 18ஆம் தேதி வரை நடக்கிறது. 1 லட்சத்து 75 ஆயிரம் சதுர அடி பரப்பில் 588 அரங்குகள் அமைக்கப்படுகிறது என்றனர்.
மேலும் கண்காட்சியில் ஒரு கோடிக்கு மேல் புத்தகங்கள் இடம் பெறுகிறது என்றும் 512 நிறுவனங்கள் புத்தகங்களை விற்பனைக்கு கொண்டு வருகிறது என்றும் தெரிவித்தனர்.
லட்சக்கணக்கான தலைப்புகளில் தமிழ், இந்தி, ஆங்கிலம் உள்பட பல மொழி நூல்கள் இடம் பெறுகிறது என்று தெரிவித்த அவர்கள், இலக்கியம், அரசியல், ஆன்மிகம், அறிவியல், வரலாறு உள்பட அனைத்து விதமான புத்தகங்களும் கிடைக்கும் என்றனர்.
புத்தக கண்காட்சியை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தொடங்கி வைக்கிறார் என்று கூறிய அவர்கள், நுழைவு கட்டணம் ரூ.5 வசூலிக்கப்படுகிறது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு கட்டணம் கிடையாது என்றனர்.
இந்த ஆண்டு 10 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என்றும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன என்றும் அவர்கள் தெரிவித்தனர்.