திருமங்கலம் இடைத்தேர்தலில் முறைகேடுகளில் ஈடுபடும் தி.மு.க.வினர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியசாமி வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் ரவுடிகள் ராஜ்யம் நடந்து கொண்டு இருக்கிறது. உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினே வாக்காளர்களுக்கு கட்டு கட்டாக பணம் கொடுக்கிற காட்சிகள் வெளியாகியுள்ளது. இதன் மீது தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மும்பை தாக்குதலில் பாகிஸ்தானுக்கு இருக்கும் தொடர்பு குறித்த ஆதாரங்களை சொல்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அமெரிக்கா செல்லக்கூடாது என்று வலியுறுத்திய சுப்ரமணியசாமி, ஒரு மத்திய அமைச்சரே அமெரிக்காவிடம் சென்று புகார் செய்வது என்பது 100 கோடி இந்திய மக்களை அவமதிக்கும் செயலாகும் என்றார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமைச்சர் ராஜா மீது வழக்கு தொடர அனுமதி கோரி பிரதமருக்கு கடிதம் எழுதினேன் என்று தெரிவித்த அவர், இதுவரை பதில் கிடைக்கவில்லை. வரும் பிப்ரவரி 15ஆம் தேதிக்குள் பதில் கிடைக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவேன் என்றார்.
லாரி உரிமையாளர்கள் போராட்டம் நியாயமானது என்று கூறிய சுப்ரமணியசாமி, அவர்கள் கூறுவது போல டீசல் விலையை மத்திய அரசு உடனடியாக குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.