வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொள்ளாவிட்டால் லாரி உரிமம் ரத்து: டி.ஆர்.பாலு எச்சரிக்கை
செவ்வாய், 6 ஜனவரி 2009 (15:19 IST)
லாரி உரிமையாளர்கள் தங்களுடைய காலவரையற்ற வேலை நிறுத்தத்தை உடனடியாக விலக்கிக் கொள்ளாவிட்டால் லாரி உரிமம் ரத்து செய்ய நேரிடும் என்று மத்திய தரைவழிப் போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு எச்சரித்துள்ளார்.
webdunia photo
FILE
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், லாரி உரிமையாளர்கள் தாங்கள் மேற்கொண்டுள்ள காலவரையற்ற வேலை நிறுத்தத்தை உடனடியாக திரும்பப்பெற வேண்டும். பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு ஏற்கனவே பல சலுகைகளை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. டீசல் விலை குறைப்பு குறித்தும் அரசு பரிசீலித்து வருகிறது என்றார்.
கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 150 ரூபாய்க்கு மேல் விற்றதன் காரணமாக ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சத்து 5 ஆயிரம் கோடி ரூபாய் ஒட்டுமொத்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்த அமைச்சர் டி.ஆர்.பாலு, இதையெல்லாம் கருத்தில் கொண்டு அரசு செயல்பட வேண்டியுள்ளது. இருந்தாலும், டீசல் விலையை குறைக்க வேண்டுமென்று தி.மு.க சார்பில் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளோம். எனவே இதை கருத்தில் கொண்டு லாரிகளை திரும்ப இயக்க வேண்டும். லாரி உரிமங்களை ரத்து செய்யும் நிலைக்கு அரசை தள்ளக்கூடாது என்றார்.
ரூ.1,655 கோடி செலவில் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் வரையிலான பறக்கும் சாலை திட்டத்திற்கு வரும் 8ஆம் தேதி காலை 10 மணிக்கு மதுரவாயலில் நடக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். முதலமைச்சர் கருணாநிதி விழாவுக்கு தலைமை வகிக்கிறார் என்று டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையை பொறுத்தவரையில் மத்திய அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது என்று கூறிய டி.ஆர்.பாலு, திருமங்கலம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் லதா அதியமான் வெற்றி பெறுவது உறுதி என்றார்.