கிளிநொச்சியில் மீண்டும் தமிழர்களின் வெற்றி அரும்பும்: விஜய டி.ராஜேந்தர்
திங்கள், 5 ஜனவரி 2009 (17:36 IST)
இந்தியாவில் இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை ஆறரைக் கோடி... இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்காக உதவ முடியவில்லை எங்களால் ஓடி... என்று வேதனை தெரிவித்துள்ள லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், இலங்கையிலும் வரலாறு திரும்பும்; கிளிநொச்சியில் மீண்டும் தமிழர்களின் வெற்றி அரும்பும் என்று கூறியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை ராணுவத்திடம் வந்து விட்டது கிளிநொச்சி என இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே மகிழ்ந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார் சிங்கள ராணுவத்தை மெச்சி... இந்த வெற்றி என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதர ஆறு வெளிநாடுகளின் துணையை வைச்சி... அப்படித் தானே! இல்லையென்று இலங்கை அரசால் மறுக்க முடியுமா, இல்லை, தமிழரோடு நேருக்கு நேர் நின்றுதான் மோதி வென்று இருக்க முடியுமா?
ஒரு நாளும் ஓய மாட்டான் தமிழன்
சிங்கள அரசின் ஒத்தை துப்பாக்கி, அது சொத்தை துப்பாக்கி. இல்லையென்றால் அது இத்தனை நாடுகளின் துணையை தேடியிருக்குமா? இல்லை, ஆயுத உதவி கேட்டுத்தான் ஓடியிருக்குமா? இவர்களால் ஆறு நாடுகளின் ஆதரவோடுதான் ஆர்ப்பரிக்க முடியும், தமிழனால் தனித்து நின்று போராட முடியும்.
சிங்கள அரசு சொல்கிறது இது தமிழர்களுக்கு பின்னடைவு... இது பின்னடைவு அல்ல... பின்னோக்கி சென்ற வளைவு... பின்னால் தான் தெரியும் அவர்களுக்கு விளைவு... தமிழன் பதுங்குவான், ஆனால் தன்னம்பிக்கையுடன் பாய்வான். அவனுக்கு பதுங்கவும் தெரியும். பாயவும் தெரியும். ஒரு நாளும் ஓயவும் மாட்டான். தேய்பிறையாய் தேயவும் மாட்டான்.
இதற்கு முன்பும் சிலமுறை கூட கிளிநொச்சியை இழந்திருக்கிறார்கள். பின்னாளில் களம் புகுந்திருக்கிறார்கள். கைப்பற்றியிருக்கிறார்கள். இது கடந்த கால வரலாறு. வரலாறு மீண்டும் மறுமுறை வரும் என்று வரலாற்று நிபுணர்கள் சொல்வார்கள். அதனால்தான் நான் எம்.ஏ. வரலாறு படித்தவன் என்ற முறையில் கூறுகிறேன், இலங்கையிலும் வரலாறு திரும்பும்; கிளிநொச்சியில் மீண்டும் தமிழர்களின் வெற்றி அரும்பும்.
இது என் போன்ற உணர்வுள்ள தமிழர்களின் நம்பிக்கை. இந்த தருணத்தில் மத்திய அரசின் மெத்தனப் போக்கை கருத்தில் கொண்டு பார்க்க வேண்டும். கடுமையாக கண்டிக்க வேண்டும். முதலமைச்சர் கருணாநிதி தமிழ்நாட்டிலிருந்து பல்வேறு கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவோடு டெல்லிக்கு சென்றார்.
தமிழர்கள் தலை உருண்டோடிவிட்டது
பிரதமர் மன்மோகன்சிங்கிடம், அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்த வேண்டும். இலங்கையில் அவதிப்படும் அப்பாவி தமிழினத்தை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பிரதமர் மன்மோகன்சிங்கும் உடனடியாக ஆவன செய்வதாக கொடுத்தார் வாக்கு!
ஆனால் இத்தனை நாளாக சொல்லிக் கொண்டிருந்தார்கள் சாக்குப் போக்கு! வாக்கு கொடுத்து ஒருமாதம் உருண்டோடி விட்டது அதற்குள் தமிழர்கள் தலை அங்கு உருண்டோடிவிட்டது. கிளிநொச்சியை நோக்கி சிங்களப்படை திரண்டோடி விட்டது. இதைத்தான் இந்திய அரசு எதிர்பார்த்ததா? அதற்காகத்தான் காலம் தாழ்த்தியதா?
அயலுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி செல்வதற்கு விமானம் கிடைக்க வில்லையா? இல்லை தமிழனுக்கு உதவ விசால மனம் இருக்கவில்லையா? சிங்கள அரசுக்கு ஏன் கொடுத்தீர்கள் அவகாசம் தமிழன் அநியாயமாய் போய் விட்டானே மோசம்.. மாநில அரசிடமும் தமிழக மக்களிடமும் ஏன் ஆடினீர்கள் நாடகம்.
சிங்கள அரசுக்கு செய்து வீட்டர்கள் சாதகம். இலங்கைத் தமிழர்களுக்கு செய்து விட்டீர்கள் பாதகம். ஒட்டு மொத்த தமிழர்களுக்கு செய்து விட்டீர்கள் துரோகம். இந்தியாவில் இருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை ஆறரைக் கோடி... இருந்தும் இலங்கைத் தமிழர்களுக்காக உதவ முடியவில்லை எங்களால் ஓடி.
கண்ணீரோடு காத்திருக்கிறேன்
எங்கள் தொப்புள் கொடி பந்தம் அங்கே துயரத்தில் நிற்கிறது. ஆனால் எங்கள் தமிழினம் இங்கே துப்புக் கெட்டல்லவா நிற்கிறது. கிளிநொச்சியை இழந்து இலங்கையில் தமிழன் நிற்கிறான் அமங்கலத்திலே... ஆனால் இங்கே அரசியல் கட்சிகள் போய் தேர்தல் என்று நிற் கிறது திருமங்கலத்திலே... தேர்தலுக்காக வாழ பல தலைவர்கள் இருக்கிறார்கள்.
தமிழர் தேறுதலுக்காக வாழ யார் இருக்கிறார்கள். பதவிக் காலம் முடியப் போகிறது. பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு அவரவர் அணிமாற தயார் ஆகிறார்கள். இலங்கை தமிழனுக்காக அணிவகுத்து நிற்க யார் இருக்கிறார்கள், சிலர்தான் இருக்கிறார்கள்.. அவரது குரல்வளையையும் சிலர் நெறிக்கிறார்கள்.
தமிழனே உன் கஷ்டகாலம் எப்போது முடியும்; உனக்கு பொழுது எப்போது விடியும்; கண்ணீரோடு காத்திருக்கிறேன், காலம் வருமென்று பூத்திருக்கிறேன் என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார்.