இலவச பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் மறியல்
திங்கள், 5 ஜனவரி 2009 (15:02 IST)
இலவச குடிமனைப்பட்டா வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
மாநில அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்தில் விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர்கள் சங்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கலந்து கொண்டனர்.
சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கட்சியின் மாநில செயலாளர் என்.வரதராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பாரிமுனை ராஜாஜி சாலையில் மறியலில் ஈடுபட்ட 800க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வரதராஜன், தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று இரண்டரை வருடங்கள் ஆகிறது. இதுவரைக்கும் 6 லட்சம் பேருக்கு இலவச பட்டா வழங்கியதாக அறிவித்தனர். ஆனால் வெறும் 2,500 பேருக்கு மட்டுமே வழங்கியுள்ளனர் என்று குற்றம்சாற்றினார்.
புறம்போக்கு இடங்கள், கோயில் நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருக்கும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதியிடம் மனு கொடுத்து உள்ளோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார் வரதராஜன்.
தமிழகம் முழுவதும் நடந்த மறியல் போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.