சுனாமியின் போது வழங்கிய கடனை ரத்து செய்ய கோரி தமிழகம் முழுவதும் மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லாததால் மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளது.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.63 கோடி வங்கி கடன்களை ரத்து செய்ய வேண்டும், கடலில் விழுந்து இறக்கும் மீனவர்களின் குடும்பத்துக்கு 90 நாட்களுக்குள் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும், மானிய விலையில் டீசலை உயர்த்தி தரவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் தமிழகம் முழுவதும் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று தொடங்கிய இந்த வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி ஒரு லட்சம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. நாகை மாவட்டம் முழுவதும் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளதால் மீன்பிடி தொழில் இன்று 2வது நாளாக முடங்கி உள்ளது.
கடற்கரைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளிலும், மீனவர்கள் வீடுகளிலும் கறுப்புக் கொடியை மீனவர்கள் ஏற்றி வைத்து உள்ளனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் நாளை தமிழ்நாடு மீனவர் பேரவை நடத்தும் மாபெரும் பேரணியில் 50,000 மீனவர்கள் பங்கேற்கின்றனர்.