திண்டுக்கல் அருகே வேன்- அரசு பேருந்து மோதல்: சென்னையை சேர்ந்த 8 ஐயப்ப பக்தர்கள் பலி
திங்கள், 5 ஜனவரி 2009 (12:06 IST)
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வேனும்- அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் சென்னையை சேர்ந்த 8 ஐயப்ப பக்தர்கள் பலியானார்கள்.
சென்னை கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பத்மநாபன் (34), அரிமுத்து (22), பாலமுருகன் (19), முரளி (20), மாரிமுத்து (22), சரவணன்(19) ஆகியோர் அதே பகுதியில் உள்ள சரவணபவன் ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர்.
கடந்த 2ஆம் தேதி இவர்கள் இருமுடி கட்டிக்கொண்டு 15 பேருடன் ஒரு வேனில் சபரிமலைக்கு புறப்பட்டனர். இவர்களுடன் கஸ்தூரி (45) என்ற பெண்ணும் சென்றார்.
இன்று காலை திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி வழியாக சபரிமலை சென்று கொண்டிருந்த போது வீரசிக்கம்பட்டி அருகே கம்பத்தில் இருந்து திண்டுக்கல் நோக்கி 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக வேனும், அரசு பேருந்தும் நேருக்குநேர் மோதியது.
இதில் வேனின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. வேனுக்குள் இருந்த பத்மநாபன், அரிமுத்து, பாலமுருகன், முரளி, மாரிமுத்து, சரவணன் ஆகியோர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
பலத்த காயம் அடைந்த 9 பேர் திண்டுக்கல்லில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது வழியிலேயே வேன் ஓட்டுனரும், கஸ்தூரி என்ற பெண்ணும் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து செம்பட்டி காவல்துறையினர், திண்டுக்கல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து வேனுக்குள் இருந்து இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக உடல்களை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.