தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து திருமங்கலத்தில் இன்று நடைபெறும் பிரசார பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி பேசுகிறார். இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.
webdunia photo
FILE
திருமங்கலம் தொகுதியில் தி.மு.க. சார்பில் லதா அதியமான் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.
வாக்குப்பதிவுக்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கும் நிலையில் திருமங்கலம் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. முதலமைச்சர் கருணாநிதி இன்று திருமங்கலத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் இன்று மாலை 3.50 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை செல்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் திருமங்கலம் சென்றடைகிறார்.
இதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருமங்கலம் தேவர் சிலை அருகே நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு முதலமைச்சர் கருணாநிதி பேசுகிறார்.
இந்த கூட்டத்தில் தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில், அக்கட்சியின் தமிழக தலைவர் கே.வி.தங்கபாலு கலந்து கொண்டு பேசுகிறார்.
6ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தனது தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொள்ளும் முதலமைச்சர் கருணாநிதி, தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார்.