திருமங்கலம்: துணை ராணுவம் வருகை

வெள்ளி, 9 ஜனவரி 2009 (13:48 IST)
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக மத்திய துணை ராணுவப் படையினர் இன்று மதுரை சென்றடைந்தனர்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் சூடுபிடித்துள்ளது.

உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க. ஸ்டாலின் உட்பட மாநில அமைச்சர்கள் பலரும், தொகுதியில் முகாமிட்டு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அஇஅதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இன்று முதல் 3 நாட்கள் திருமங்கலம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.

அஇஅதிமுக கூட்டணியில் உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஏற்கனவே தொகுதிக்குட்பட்ட பல இடங்களில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அவரது மனைவியும், துணைத் தலைவருமான ராதிகா உட்பட பலரும் தேர்தல் பிரசார களத்தில் இருப்பதால், திருமங்கலம் தொகுதி பரபரப்புடன் காணப்படுகிறது.

9ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில், அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக தேர்தல் நடைபெறுவதற்கு ஏதுவாக 8 கம்பெனி மத்திய துணை ராணுவப்படையினர் இன்று மதுரை சென்று சேர்ந்தனர்.

அவர்கள் அனைவரும் ஓரிரு நாளில் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்