சென்னையில் இணைய தளம் மூலம் வீட்டில் இருந்தே மின்சார கட்டணத்தை செலுத்தும் வசதி மேலும் 2 வங்கிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனை மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று தொடங்கிவைத்தார்.
ஆன்லைனில் மின்சாரக் கட்டணம் கட்டும் வசதி ஐசிஐசிஐ, இந்தியன் வங்கி வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த வசதியை இன்று சென்னையில் மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி தொடங்கி வைத்தார்.
குறைந்த மின் அழுத்த இணைப்பு பயன்படுத்தும் பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்த மின்வாரிய வசூல் மையங்களுக்கு சென்று பணம் கட்டுகிறார்கள். கடைசி நாளில் தான் பெரும்பாலான மக்கள் பணம் செலுத்தச் செல்வதால் கூட்டம் அதிகமாகி நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளதாக நிகழ்ச்சியில் பேசுகையில் ஆற்காடு வீராசாமி குறிப்பிட்டார்.
இதனைக் கருத்தில் கொண்டு, கடந்த 1.4.08 முதல் 24 மணி நேரமும் பணம் செலுத்தும் வகையில் கனரா வங்கி உதவியுடன் சென்னையில் எந்த நேரமும் பணம் கட்டும் வசதியை அறிமுகப்படுத்தியதாகவும், தற்போது இந்த சேவையில் ஐசிஐசிஐ, இந்தியன் வங்கிகளும் பங்கு கொண்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
தற்போது கும்மிடிப்பூண்டி முதல் மரக்காணம் வரை பயனடையும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றார் அவர்.