சென்னை: கிறிஸ்தவ ஆலயத்தில் பணம் கொள்ளை

வெள்ளி, 9 ஜனவரி 2009 (13:46 IST)
சென்னை பெசன்ட் நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா ஆலயத்தில் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் காணிக்கையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

பெசன்ட் நகரில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற வேளாங்கண்ணி ஆலயத்திற்கு மாநிலம் முழுவதும் இருந்து வரும் கிறிஸ்தவர்கள் காணிக்கைகளை செலுத்துவது வழக்கம்.

இதற்காக இந்த ஆலயத்தின் முன்பு மரத்தினால் செய்யப்பட்ட உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி அந்த உண்டியலில் ஏராளமானோர் தங்கள் காணிக்கைகளை செலுத்தி இருந்தனர்.

இந்நிலையில், இன்று அதிகாலை பெசன்ட்நகர் வேளாங்கண்ணி ோயிலின் உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பதை, ஆலய ஊழியர் பீட்டர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து பாதிரியார் மைக்கேலுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மர்ம ஆசாமிகள் ஆலயத்தின் உண்டியலை உடைத்து அதில் இருந்த சுமார் ஒன்றரை லட்சம் ரூபாயைக் கொள்ளையடித்திருப்பது, தெரிய வந்தது. இதுகுறித்து திருவான்மியூர் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்