சாய சலவை, தோல் பதனிடும் ஆலைகள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஒரு சொட்டுக் கூட ஆற்றில் கலக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தமிழக அரசு முறையாக செயல்படுத்தாததை கண்டித்து சேலத்தில் பா.ஜ.க சார்பில் வரும் 5ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் காவேரி, பவானி, பாலாறு மற்றும் நொய்யல் ஆற்றில் சாய கழிவுகள் கலப்பதால் நீர், காற்று மற்றும் நிலங்கள் மாசுப்பட்டுள்ளது. கழிவுநீரை ஆற்றில் விடக்கூடாது என தமிழகத்தில் உள்ள விவசாய சங்கங்கள் தொடர்ந்து நீதிமன்றத்தில் போராடி வருகின்றன.
கோவை, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள சாய ஆலைகள், துணி பதனிடும் ஆலைகள் சலவை பட்டறைகள் என ஆயிரக்கணக்கில் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் அருகில் உள்ள ஆற்றில் கலந்து விடுகிறது.
பாலாறு ஆற்றுப்படுகையில் வேலூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய இடங்களில் நூற்றுக்கணக்கான தோல் பதனிடும் ஆலைகளின் கழிவுகள் அந்த பகுதியில் உள்ள நிலங்களை பாழ்படுத்துவதுடன் குடிநீர் ஆதாரங்களையும் நாசப்படுத்துகிறது.
சாய கழிவு, தோல் கழிவுகள் நீர் நிலங்களில் பாய்வதால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. விவசாய விளைச்சல் பாதிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக சென்னை உயர் நீதிமன்றம் சாய சலவை, தோல் பதனிடும் ஆலைகள் ஒரு சொட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை கூட ஆற்றில் கலக்க கூடாது என்று நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை அரசு முறையாக செயல்படுத்தவில்லை.
தமிழக அரசு இது விஷயமாக விரைந்து செயல்பட்டு விவசாயிகளின் நலன் காக்க வற்புறுத்தி வரும் 5ஆம் தேதி மாலை மாநிலப் பொதுச்செயலாளர் வி.ரமேஷ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் சேலத்தில் நடைபெறும் என்று இல.கணேசன் கூறியுள்ளார்.