தமிழக நெடுஞ்சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு ரூ.26 கோடி : டி.ஆர். பாலு அனுமதி

சனி, 3 ஜனவரி 2009 (15:54 IST)
தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த ரூ.2,566.39 லட்சம் அனுமதி அளித்து மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு உத்தரவிட்டுள்ளார்.

webdunia photoFILE
இது குறித்து அவ‌ர் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், "தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை எண்.45சி-இல் கும்பகோணம் புறவழிச்சாலையில் துவங்கி தஞ்சாவூர் புறவழிச்சாலை முடியும் வரை மற்றும் பண்ருட்டி முதல் சேத்தியாந்தோப்பு வரையுள்ள சாலையை தரம் உயர்த்தி மேம்படுத்த ரூ.2,566.39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

165 கி.மீ. நீளமுள்ள இந்தச் சாலை தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம், சேத்தியாந்தோப்பு, வடலூர், நெய்வேலி, பண்ருட்டி வழியாக விக்கிரவாண்டி வரை செல்கிறது. மேலும் தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத் தலங்களையும், நெய்வேலி, பண்ருட்டி போன்ற வர்த்தக ஊர்களையும் இந்தச் சாலை இணைக்கிறது.

என்.எச். 45சி தஞ்சாவூரில் (என்.எச். 67) இணைவதோடு விக்கரவாண்டியையும் (என்.எச். 45) இணைக்கிறது. எனவே இந்தச் சாலையை மேம்படுத்துவதன் மூலம் என்.எச். 67 மற்றும் என்.எச். 45 ஆகிய சாலைகளில் போக்குவரத்து பெரிதளவும் எளிதாக இருக்கும். மேலும் டெல்டா மாவட்டங்களான கடலூர், அரியலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய நகரங்கள் கிழக்கு மேற்கு மற்றும் வடகிழக்கு பருவகாலங்களில் அதிகளவு மழையை பெறுகிறது.

இந்தச் சாலை டெல்டா மாவட்டங்கள் வழியாக செல்வதால் மழையின் காரணமாக அடிக்கடி சேதமடைகிறது. மேலும் தற்போதுள்ள அதிக அளவுள்ள போக்குவரத்தையும் கணக்கில் கொண்டு இந்தச் சாலையை மேம்படுத்துவது அவசியம் என்பதால் தற்போது இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது" எ‌ன்று டி.ஆர். பாலு தெரிவித்துள்ளார்.