சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு அளிக்கப்பட்ட ரூ.63 கோடி கடனை மத்திய- மாநில அரசுகள் தள்ளுபடி செய்யக் கோரி வரும் 6ஆம் தேதி சென்னையில் மாபெரும் பேரணியை தமிழ்நாடு மீனவர் பேரவையும், தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்கமும் இணைந்து நடத்துகிறது.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மீனவர் பேரவையின் தலைவர் இரா.அன்பழகனார், தமிழ்நாடு விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் எஸ்.வேணுகோபால், சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு புதிய தொழில் தொடங்க நாட்டுப்படகுக்கு ரூ.15 ஆயிரம் முதல் விசைப்படகுகளுக்கு 15 லட்சம் வரை வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த தொகையை எங்களால் திருப்பிச் செலுத்த முடியாது என்று கூறியபோது, அது தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது என்றனர்.
ஆனால், இப்போது படகுகளை ஜப்தி செய்யுமாறு தாக்கீது கொடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர்கள், இந்த கடனை ரத்து செய்ய வேண்டும் என்று மீனவளத்துறை அமைச்சரையும், முதலமைச்சரையும் சந்தித்து வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.
சுனாமி கடனை ரத்து செய்யக் கோரி வரும் 4ஆம் தேதி (நாளை) கன்னியாகுமரி முதல் சென்னை வரை அனைத்து மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளில் கருப்பு கொடியேற்ற முடிவு செய்துள்ளோம். 6ஆம் தேதி சென்னையில் 50,000 மீனவர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தவும் திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.
இதற்கும் தமிழக அரசு செவிசாய்க்கவில்லை என்றால் சென்னை, எண்ணூர், தூத்துக்குடி ஆகிய துறைமுகம் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து துறைமுகங்களுக்கும் கப்பல்கள் வந்து சேருவதை தடுக்கும் வகையில் படகுகளுடன் சென்று கடலில் மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.
எனவே, மத்திய- மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து ரூ.63 கோடி சுனாமி கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டனர்.