தற்காலிக பணியாளர்கள் போராடி நிர்ப்பந்தப்படுத்தினால் அரசு உங்கள் நன்மைக்காக எடுத்த முடிவை மறு பரிசீலனை செய்யவேண்டியிருக்கும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1996-2001 கால கட்டத்தில் தி.மு.க. ஆட்சியில் அரசு பணியாளர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பல்வேறு சலுகைகள், பின்னர் வந்த அ.தி.மு.க. ஆட்சியில் பறிக்கப்பட்டன. பறிக்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் மீண்டும் வழங்கிட வேண்டுமென்று அரசு பணியாளர்கள் 2003-ம் ஆண்டு போராட்டம் நடத்தியபோது, போராட்டம் நடத்திய லட்சக்கணக்கான அரசு பணியாளர்கள் கூண்டோடு "டிஸ்மிஸ்'' செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்டு சொல்லொணாக் கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.
அரசு நிர்வாகமே ஸ்தம்பித்திருந்த நிலையில், அவசரம் அவசரமாக எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல்; 11 ஆயிரம் தற்காலிகப் பணியாளர்களை தொகுப்பூதிய அடிப்படையில் அ.தி.மு.க. ஆட்சி நியமனம் செய்தது. அரசு பணியாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததற்கு பிறகு, தற்காலிகப் பணியாளர்கள் அனைவரும் அ.தி.மு.க. ஆட்சியில் பணிநீக்கம் செய்யப்பட்டனர். அவர்களை அரசு பணியில் தொடர்ந்து நீடித்திட வேண்டுமென்று எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. கோரிக்கை வைத்தது. அதனையொட்டி, 11 ஆயிரம் தற்காலிக பணியாளர்கள் மீண்டும் தொகுப்பு ஊதியத்தில் பணிதொடர அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றவுடன், தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்புகளை உருவாக்கி தரவேண்டும் என்ற குறிக்கோளுடன்; தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் உரிய தேர்வு நடத்தி; விதிப்படி முறையான பணிநியமனம் வழங்கிட முடிவு செய்து ஆணையிடப்பட்டது.
இந்த அரசாணைக்கு எதிராக தற்காலிக பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். சென்னை உயர் நீதிமன்றம் அவர்களது வழக்கை தள்ளுபடி செய்ததோடு, அரசு எடுத்த முடிவுப்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தி, முறையான பணிநியமனம் வழங்கலாம் என்று உத்தரவிட்டது.
உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அரசு பணியாளர் தேர்வாணையம் சிறப்பு தேர்வு நடத்தியது. அதில் 4,103 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 4,103 பேருக்கும் முறையான பணிநியமனம் வழங்கக்கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தற்காலிக பணியாளர்கள் மீண்டும் வழக்கு தொடுத்து தடையாணை பெற்றனர்.
இதற்கிடையே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஏற்கனவே நடத்திய தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 4,103 பேருடன்; தொடர்ந்து ஏற்பட்ட காலியிடங்களை தற்காலிக பணியாளர்களைக் கொண்டே நிரப்பலாம் என்று முடிவுசெய்து; கூடுதலாக 1,510 பேர் தேர்வு செய்து பட்டியல் வழங்கிட தேர்வாணையத்தை அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்டவர்கள் போக, எஞ்சியுள்ள தற்காலிக பணியாளர்களுக்கு படிப்படியாக அரசு அலுவலகங்களில் ஏற்படும் காலியிடங்களில் முறையான பணிநியமனங்கள் வழங்கலாம் என்றும்; அதுவரை அவர்கள் அரசு பணியில் தொகுப்பூதியத்தில் தொடரலாம் என்றும் கருணை அடிப்படையில் அரசு முடிவெடுத்துள்ளது.
இந்த நிலையில், தற்காலிக பணியாளர்களில் ஒருசிலர், சில அரசியல்வாதிகளின் தூண்டுதலால் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்ற முறைகளைப் பின்பற்றி; அரசை நிர்ப்பந்தப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அரசுக்குத் தகவல்கள் வந்துள்ளன.
இது போராட்டத்தின் மூலமாக தீர்க்கக்கூடிய பிரச்சனை அல்ல. போராட்டத்தின் மூலம் தங்களுடைய பிரச்சனையைத் தீர்த்துக் கொள்ள தற்காலிகப் பணியாளர்கள் முயற்சிப்பார்களேயானால், அவர்கள் மீது இரக்கம்கொண்டு, அவர்களுடைய வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு, அரசு எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று எச்சரிக்கப்படுகிறது என தமிழக அரசு தெரிவித்துள்ளது.