சென்னை அருகே உள்ள நெமிலியில் அமைக்கப்படவுள்ள ரூ.908 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தலைநகர் டெல்லியில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கபில் சிபல், " சென்னை அருகே நெமிலியில் அமைக்கப்படவுள்ள ரூ.908 கோடி மதிப்பிலான கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய நிதியாக ரூ.871.24 கோடி தமிழக அரசுக்கு அளிக்கப்படவுள்ளது" என்றார்.
சென்னை நகர மக்களின் குடிநீர் தேவையை சமாளிக்கத் தமிழக அரசு பரிந்துரைத்துள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் நிறைவேறுவதன் மூலம், கூடுதலாக 100 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என்றும் அவர் கூறினார்.
இந்த திட்டம் இரண்டாண்டுகளுக்குள் முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர இந்த திட்டத்தை நடப்பு நிதியாண்டில் செயல்படுத்துவதற்காக ரூ.300 கோடியை ஏற்கனவே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.