அரசு ஊழியர்களுக்கு இந்த மாதமே 6-வது ஊதியக்குழு சம்பளம் வழங்க வேண்டும்: என்.ஜி.ஓ. சங்கம்
வெள்ளி, 2 ஜனவரி 2009 (11:45 IST)
''தமிழக அரசு ஊழியர்களுக்கு 6-வது ஊதியக்குழு சம்பளத்தை இந்த மாதமே வழங்க வேண்டும்'' என்று என்.ஜி.ஓ. சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் (என்.ஜி.ஓ.) மாநிலத் தலைவர் கோ.சூரியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு அலுவலர்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பது 6-வது ஊதியக்குழு பணப்பயன்களைத்தான். இதற்காக அமைக்கப்பட்ட அலுவலர் குழுவின் காலம் பிப்ரவரி மாதம் 19ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
இதற்கு மேலும் காலநீட்டிப்பு செய்தால் அது அரசு ஊழியர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவே அமையும். எனவே, தமிழக அரசு மேலும் காலநீட்டிப்பு செய்யாது என்று நம்புகிறேன். ஊதிய நிர்ணயம் தொடர்பாக முதலமைச்சர் கருணாநிதி அண்மையில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்துள்ளார்.
அதிகாரிகளைப் பொறுத்தவரையில், நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்த பின்பு ஊதியக்குழு அறிவிப்பை வெளியிட்டு பணப்பயன்களை வழங்கலாம் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால், முதலமைச்சர் கருணாநிதி, அவ்வளவு காலம் தாமதிக்க வேண்டாம். விரைவாக அறிவிக்க ஆவண செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார்.
எனவே, பொங்கலின்போது அதாவது, இந்த மாதத்திற்குள்ளாகவே 6-வது ஊதியக்குழு பணப்பயன் கிடைக்கும் என்ற நம்பிக்கை அரசு ஊழியர்களுக்கு உள்ளது. ஜனவரி மாதத்திற்குள்ளாகவே ஊதியக்குழு முடிவை அறிவிக்கும்படி தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று கோ.சூரியமூர்த்தி கூறியுள்ளார்.