திருமங்கலம் இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடு பிடித்துள்ள நிலையில், தி.மு.க. பொருளாளரும் உள்ளாட்சித்துறை அமைச்சருமான மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் இன்று தனது பிரசாரத்தை தொடங்குகின்றனர்.
webdunia photo
FILE
மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வருகிற 9ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், துணைத் தலைவர் ராதிகா சரத்குமார், ம.தி.மு.க பொதுச் செயலர் வைகோ, அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற, நாடாளு மன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே தொகுதி முழுவதும் சென்று பிரசாரப் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானை ஆதரித்து அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
webdunia photo
FILE
இதேபோல் தே.மு.தி.க வேட்பாளர் தனபாண்டியனை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் இன்று முதல் பிரச்சாரத்தை மேற்கொள்கிறார். இவர் ஒருவாரம் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.
இன்று பெருங்குடியில் தனது பிரசாரத்தை தொடங்கும் விஜயகாந்த், தொகுதி முழுவதும் ஊர் ஊராக சென்று தே.மு.தி.க வேட்பாளருக்கு ஆதரித்து திரட்டுகிறார்.
வரும் 7ஆம் தேதியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைய இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் பிரசாரத்தை மேற் கொள்ளவிருக்கும் நிலையிலும், இந்த வாரத்தில் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.