இலவச பொங்கல் பொருட்கள் வழங்கும் திட்டம்: முதல்வர் துவக்கினார்
வியாழன், 1 ஜனவரி 2009 (12:11 IST)
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொங்கல் வைப்பதற்குத் தேவையான பொருட்களை இலவசமாக வழங்கும் திட்டத்தை தமிழக முதல் அமைச்சர் கருணாநிதி இன்று சென்னையில் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், இலவச வேஷ்டி-சேலை வழங்கும் திட்டத்தையும் அவர் துவக்கினார்.
சர்க்கரைப் பொங்கல் வைப்பதற்கு தேவையான அரிசி, வெல்லம் தலா 500 கிராம், பாசிப்பயறு 100 கிராம், ஏலக்காய், முந்திரி தலா 20 கிராம் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
புத்தாண்டு தினமான இன்று இத்திட்டத்தை சென்னை வேளச்சேரியில் இன்று காலை 10 மணியளவில் நடந்த நிகழ்ச்சியில் முதல் அமைச்சர் கருணாநிதி தொடங்கி வைத்தார். வரும் 14ஆம் தேதி வரை அனைத்து நாட்களிலும் பொங்கல் பொருட்கள் அடங்கிய இந்தப் பையை ரேஷன் அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அரசு தெரிவித்துள்ளது.
இதேபோல் ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச வேஷ்டி-சேலை திட்டத்தையும் முதல் அமைச்சர் இன்று துவக்கி வைத்தார். தமிழகம் முழுவதும் வழங்குவதற்காக ஒரு கோடியே 60 லட்சம் வேஷ்டிகளும், அதே எண்ணிக்கையிலான சேலைகளும் தயாரிக்கப்பட்டுள்ளதாக கைத்தறித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருமங்கலம் தொகுதியில் இடைத்தேர்தல் நடப்பதால் மதுரை மாவட்டத்தில் தேர்தல் நடத்தைவிதி அமலில் உள்ளது. இதனால், இலவச வேஷ்டி, சேலை மற்றும் சர்க்கரைப் பொங்கல் வைக்கத் தேவையான பொருள்களை இலவசமாக வழங்கும் திட்டம் போன்றவற்றுக்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது குறிப்பிட்டுள்ளது.