சென்னை துறைமுகத்தில் இருந்து, மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாக வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து துறைமுகத்தில் இருந்த ஒரு சரக்குப் பெட்டகத்தில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதன் மீது, சமையல் செய்ய பயன்படும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள், அலுமினியம், பருத்தி மற்றும் படுக்கை விரிப்புகள் என்று எழுதப்பட்டிருந்தது. அந்த சரக்கு பெட்டகத்தை உடைத்து பரிசோதித்ததில், 8 பெட்டிகளில் வெள்ளை நிறத்தில் மாவு போன்ற பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.பின்னர் அது 'கெடமின் ஹைட்ரோகுளோரைடு' என்ற போதைப் பொருள் என்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அங்கிருந்த 201.6 கிலோ போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.20 கோடி ஆகும்.
அண்மையில், மிக அதிக அளவில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் இதுதான் என்றும் வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.