விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதற்காக கைது செய்யப்பட்டுள்ள இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோரின் காவல் ஜனவரி 13ஆம் தேதிவரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஈரோடு மாவட்ட தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி சார்பாக கடந்த 14ஆம் தேதி ஈரோடு கருங்கல்பாளையத்தில் பொதுகூட்டம் நடந்தது. இந்த பொதுகூட்டத்தில் திரைப்பட இயக்குனர் சீமான் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.
அப்போது, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலையை விமர்சித்ததாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என மொடக்குறிச்சி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.பழனிச்சாமி ஈரோடு டவுன் மாவட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் (டி.எஸ்.பி.) தனபாலிடம் புகார் கொடுத்தார்.
மேலும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் தங்கபாலுவும் தமிழக முதல்வரை சந்தித்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுதார். இதையடுத்து திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, தமிழ் தேச பொதுவுடமை கட்சி பொதுச்செயலாளர் மணியரசன் ஆகியோர் மீது ஈரோடு கருங்கல்பாளையம் காவல்துறை ஆய்வாளர் சிவக்குமார் வழக்கு பதிவு செய்தார்.
இதன்படி இயக்குனர் சீமான் தேனி மாவட்டம் படபிடிப்பில் இருந்தபோதும், மணியரசன் சென்னை அலுவலகத்தில் இருந்தபோதும் கொளத்தூர் மணி அவர் வீட்டில் இருந்தபோதும் காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் மீது இந்திய தண்டனை சட்டம் 505 ( பொது அமைதிக்கு பங்கம் விளைவித்தல்), 13(1)(பி) (இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுவது) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரையும் ஈரோடு நீதிமன்ற நீதிபதி அசோகன் முன்னிலையில் காவல்துறையிர் ஆஜர்படுத்தினர். அப்போது, மூன்று பேரையும் டிசம்பர் 31ஆம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர்கள் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
கோவை மத்திய சிறையில் இருக்கும் டைரக்டர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோரிடம் ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதி சரண் விசாரணை நடத்தினார்.
விசாரணையை மாவட்ட நீதிபதி ஏ.எஸ்.கண்ணன் நேரடியாக மேற்பார்வை செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சரண், குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கும் வருகிற 13ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து உத்தரவிட்டார்.