மீனவர்களின் பாதுகாப்புக்காக அவர்களுக்கு விரைவில் அடையாள அட்டை வழங்கப்படும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்.
கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கத்தோடு கப்பல் போக்குவரத்து இயக்குனரகமும், இந்திய துறைமுகங்களும் இணைந்து, 'கடல்சார் பாதுகாப்பு பிரச்சனைகளும் அதனை எதிர்கொள்ளும் விதமும்' என்ற தலைப்பில் சென்னை நடந்த தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், நாட்டில் உள்ள 12 துறைமுகங்களும், பாதுகாப்பு நிறுவனங்களும் கடந்த ஒரு வருடமாக துறைமுகங்களின் பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்தி வந்தது என்றார்.
உத்தண்டியில் 100 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தை துவக்கி வைத்து, 200 ஏக்கரில் ரூ.1,500 கோடியில் கட்டப்படவிருக்கும் கடல்சார் வளாகத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று மாலை அடிக்கல் நாட்டுகிறார் என்று கூறினார் டி.ஆர்.பாலு.
இந்த பல்கலைக்கழகத்திற்கு மும்பை, கொல்கத்தா, விசாகப்பட்டினத்தில் வளாகங்கள் அமைக்கப்படவுள்ளன என்று தெரிவித்த அமைச்சர், இந்த பல்கலைக்கழகத்தில் ஆரம்பத்தில் 8 துறைகளில் கடல்சார் படிப்புகள் தொடங்கப்பட உள்ளது என்றார்.
கடலில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்களுக்கு பாதுகாப்பாக அடையாள அட்டையும், அவர்கள் பயன்படுத்தும் படகுகளுக்கு அடையாள எண்ணும் வழங்கப்படும் என்று கூறிய அமைச்சர் டி.ஆர்.பாலு, இது தொடர்பாக நாளை (1ஆம் தேதி) நடைபெற உள்ள கடல்சார் மாநிலங்கள் மேம்பாட்டு கழக கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றார்.