திருமங்கலம் தேர்தல்: மதுரை சென்றார் நரேஷ் குப்தா

செவ்வாய், 30 டிசம்பர் 2008 (19:38 IST)
வரும் 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் திருமங்கலம் சட்டசபைத் தொகுதியில், ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தொடர்ந்து அங்கு நிலைமையைப் நேரில் ஆய்வு செய்வதற்காக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா திருமங்கலம் விரைந்துள்ளார்.

சட்டமன்ற உறுப்பினர் ஆர். சாமி உட்பட 51 அஇஅதிமுகவினரை காவல்துறையினர் இன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இடைத்தேர்தல் பிரசாரம் ஒருபுறம் சூடுபிடித்துள்ள நிலையில், திருமங்கலம் தொகுதியில் கடந்த சில நாட்களாகவே ஆளும் திமுக-வினருக்கும், அஇஅதிமுக-வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, பதற்றம் ஏற்பட்டு வருகிறது.

திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்படுவதாக இரு கட்சியினரும் ஒருவரையொருவர் புகார் கூறி வருகிறார்கள். இதுவரை 230 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமங்கலம் தொகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே, தேர்தல் பணிகளை ஆய்வு செய்வதற்காக மாநில தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இன்று விமானம் மூலம் மதுரை சென்று, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் திருமங்கலம் தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து ஆய்வு செய்வார் என்று தெரிகிறது.

மத்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் ஜெயபிரகாஷ் வரும் 2ஆம் தேதி மதுரை செல்கிறார். திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலைமையை நேரில் கண்டு அறிய இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெப்துனியாவைப் படிக்கவும்