ஜனவரி 4 முதல் லாரிகள் ஓடாது : லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவிப்பு
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (18:35 IST)
டீசல் விலையை ரூ.10 குறைக்காவிட்டால் ஜனவரி 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12 மணி முதல் அகில இந்திய அளவில் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தென்னக லாரி உரிமையாளர்கள் நலசங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அச்சங்க தலைவர் முனிரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலக அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக குறைந்த போது மத்திய அரசு டீசல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் தான் குறைத்துள்ளது. லிட்டருக்கு 10 ரூபாய் குறைக்க வேண்டும் என்று மத்திய பெட்ரோலிய துறை அமைச்சரிடம் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு விட்டது.
எனவே வருகிற 4ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இரவு 12 மணி முதல் அகில இந்திய அளவில் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.
இதற்கு ஆதரவாக தென்னக லாரி உரிமையாளர்கள் நலசங்கம் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்கிறது. டீசல் விலையை குறைக்கும் வரையில் லாரிகள் ஓடாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும், பெட்ரோல் நிறுவனங்கள் குறைந்த அளவே பெட்ரோல், டீசல் சப்ளை செய்கின்றன. இந்த மாவட்டங்களில் அதிகாரிகள் செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
டீசல் விலை உயர்வால் கட்டுமான தொழில் உள்பட பல்வேறு தொழில்கள் பாதிப்பு அடைந்துள்ளன. எனவே மத்திய அரசு உடனே டீசல் விலையை குறைக்க வேண்டும். 4ஆம் தேதி முதல் லாரிகள் ஸ்டிரைக் நடந்தால் இந்தியா முழுவதும் காய்கறி உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு செல்ல இயலாத நிலை ஏற்படும். இதனால் பொருட்களின் விலை உயரும், தொழில்கள் முடங் கும். ஏற்றுமதி தடைபடும். அரசுக்கு தினமும் பலகோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்படும். எனவே டீசல் விலையை உடனே லிட்டருக்கு ரூ.10 குறைக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.