பொங்கல் பரிசாக தமிழகத்துக்கு 1,100 மெகாவாட் மின்சாரம்
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (17:30 IST)
இந்தாண்டு பொங்கல் பரிசாக தமிழகத்துக்கு 1,100 மெகாவாட் மின்சாரம் வழங்கப்படும் என்று நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சேர்மனும், நிர்வாக இயக்குனருமான ஏ.ஆர்.அன்சாரி தெரிவித்தார்.
நெய்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மூன்று மின்நிலையத்தில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கி வருகிறோம். தற்போது 900 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்கிறோம். மேலும் 2,490 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்து அதில் இருந்து 1,100 மெகாவாட் மின்சாரம் பொங்கல் பரிசாக தமிழகத்திற்கு வழங்கப்படும் என்றார்.
என்.எல்.சி சார்பில் ஜெயங்கொண்டம், ஒரிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் அமைக்கப்படும் அனல் மின் நிலையத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளோம் என்றும் இது 2015-16இல் நிறைவடையும் என்றும் அன்சாரி தெரிவித்தார்.
ஜெயங்கொண்டம் அனல்மின் நிலையம் அமைக்க 12 ஆயிரம் ஹெக்டேர் நிலம் தேவைப்படுகிறது என்று தெரிவித்த அன்சாரி, இதில் 3,600 ஹெக்டேர் நிலம் தற்போது கையகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் மீதி நிலங்களை கையகப்படுத்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் அரசும், சம்பந்தப்பட்டவர்களும் நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
நாட்டிலேயே தமிழகத்தில் தான் 80 விழுக்காடு நிலக்கரி இருக்கிறது என்று கூறிய அன்சாரி, நெல்வேலி பகுதிகளில் 65 செ.மீ வரை மழை பெய்ததால் மின்உற்பத்தி பாதிக்கப்பட்டது என்றும் தற்போது மின்உற்பத்தி நன்றாக நடைபெறுகிறது என்றார்.
இந்தாண்டில் 1065.70 கோடி யூனிட் மின்உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றும் தற்போது 979.52 கோடி யூனிட் மின்உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் அன்சாரி தெரிவித்தார்.