கோவை அருகே கார்-லாரி மோதல் : கேரள வாலிபர்கள் 4 பேர் பலி
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (14:48 IST)
பெங்களூருக்கு காரில் சுற்றுலா சென்ற கேரள வாலிபர்கள் 4 பேர் கோவை அருகே லாரி மோதி உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் திருச்சூர் வாடானை பில்லியை சேர்ந்த வாலிபர்கள் 8 பேர் ஒரு காரில் நேற்று மாலை பெங்களூருக்கு சுற்றுலா புறப்பட்டனர். கார் கோவை அருகே உள்ள சூலூர் அத்தப்ப கவுண்டன்புதூர் பைபாஸ் சாலையில் நள்ளிரவு 1 மணியளவில் சென்று கொண்டிருந்தது.
காருக்கு முன்னால் ஒரு லாரி கோவையில் இருந்து அவினாசி நோக்கி சென்றது. காரை ஷாதிக் (24) என்பவர் ஓட்டி வந்தார். இவர் லாரியை முந்தி செல்ல முயன்றபோது, எதிர்பாராத விதமாக முன்னால் சென்ற லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த ஷாதிக் (24), ஷபர் ஹம்சா (25), ஷமீர் (23), ஹர்ஷத் (24) ஆகியோர் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி பலியாயினர்.