கோபியில் அரசு பேரு‌ந்து ஜப்தி

செவ்வாய், 30 டிசம்பர் 2008 (13:17 IST)
விபத்தில் இறந்தவருக்கு நஷ்டஈடு வழங்காத தமிழ்நாடு அரசு பேரு‌ந்தை கோபியில் நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

ஈரோடு மாவட்டம், கோபி அருகே உள்ளது கெட்டிசெவியூர். இங்குள்ள தண்ணீர்பந்தல் பாளையத்தை சேர்‌ந்தவர் காமராஜ் (45). இவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அந்தியூருக்கு அரசு பேருந்தில் சென்றார். அவர் இறங்கும்போது தவறி விழுந்ததில் இறந்தார்.

இது குறித்து அவரது மனைவி முத்தாயம்மாள் கோபி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி ஜெகநாதன் காமராஜ் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சத்து 83 ஆயிரம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டார். ஆனால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் இந்த நஷ்டஈடை கொடுக்கவில்லை.

இதனால் முத்தாமயம்மாள் மீண்டும் கோபி முதன்மை சார்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சரவணன், நஷ்டஈடு கொடுக்காததால் அரசு பேரு‌ந்தை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி சத்தியமங்கலத்தில் இருந்து கோபி வழியாக ஈரோடு செல்ல கோபி பேருந்து நிலையத்திற்குள் வந்த அரசு பேரு‌ந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

வெப்துனியாவைப் படிக்கவும்