ஏழை குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சை நிதி உதவி அதிகரிப்பு

செவ்வாய், 30 டிசம்பர் 2008 (15:32 IST)
ஏழைக் குழந்தைகளுக்கான இருதய அறுவை சிகிச்சைக்கு அளித்து வரும் உதவித் தொகையை அதிகரித்து த‌‌மிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக த‌மிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளிக் குழந்தைகள் மற்றும் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், சிறுவர், சிறுமியரின் இருதய அறுவை சிகிச்சைக்காக 17 தனியார் மருத்துவமனைகளுடன் சேர்ந்து அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

தேசிய ஊரக சுகாதார நிதியிலிருந்து இருதய அறுவை சிகிச்சைக்கான நிதியை ஒதுக்குவது என்றும் அரசு சார்பில் முடிவெடுக்கப்பட்டது.

அதாவது, ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் வரை வருமானம் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளுக்கு மட்டும் இருதய அறுவை சிகிச்சைக்கு நிதி தரப்படும்.

கடந்த காலங்களில் சாதாரண இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ.10,000, பெரிய அளவில் நடக்கும் இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ.30,000, ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சைக்கு ரூ.70,000 என உதவித் தொகை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

தற்போது, சாதாரண இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ.20,000, பெரிய அளவில் நடக்கும் அறுவை சிகிச்சைக்கு ரூ.50,000, ஓப்பன் ஹார்ட் அறுவை சிகிச்சைக்கு ரூ.1 லட்சம் என்று உதவித் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சையை மருத்துவ மற்றும் ஊரக சுகாதார இயக்குநர் மேற்பார்வையிட வேண்டும். டிசம்பர் 5ஆம் தேதி முதல் இந்த உத்தரவு அமலுக்கு வரும் எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்