ஜனவரி 1ஆம் தேதி முதல் பொங்கல் இலவச பொருள் விநியோகம்
செவ்வாய், 30 டிசம்பர் 2008 (10:30 IST)
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் இலவசமாக ஜனவரி 1ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை துணை ஆணையர் என்.முரளிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மக்கள் அனைவரும் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவினை சிறப்பாக இனிப்புடன் கொண்டாட சர்க்கரைப் பொங்கலுக்குத் தேவையான பொருள்கள் இலவசமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் (பொருள் இல்லா குடும்ப அட்டைகள் தவிர) வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இதன்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் (மதுரை மாவட்டம் நீங்கலாக) (பொருள் இல்லா குடும்ப அட்டைகள் தவிர) இலவசமாக கீழ்க்கண்ட பொங்கல் பொருள்கள் அடங்கிய பை குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ள நியாயவிலை அங்காடிகள் மூலம் 1.1.2009 முதல் 14.1.2009 வரை வழங்கப்படும்.
பச்சரிசி 500 கிராம், வெல்லம் 500 கிராம், பாசிபருப்பு 100 கிராம், முந்திரி திராட்சை ஏலக்காய் 20 கிராம் ஆகியவை நியாயவிலை அங்காடிகளில் 31.12.2008 வரை பதியப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு (பொருள் இல்லா குடும்ப அட்டைகள் தவிர) இந்த பொங்கல் பொருள்கள் அடங்கிய பைகள் இலவசமாக வழங்கப்படும்.
அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பொருள்கள் அடங்கிய பைகள் வழங்கப்படவுள்ளதால் அட்டைதாரர்கள் எந்தவித அவசரமுமின்றி அவர்களது குடும்ப அட்டை இணைக்கப்பட்டுள்ள நியாயவிலை அங்காடிகளில் இலவச பொங்கல் பொருள்கள் அடங்கிய பைகளை 1.1.2009 முதல் 14.1.2009 வரை எந்த நாட்களிலும் நியாயவிலை அங்காடியில் வேலை நேரத்தில் பெற்றுக் கொள்ளலாம்.
நகர்ப்புறங்களில் நியாயவிலை அங்காடிகளில் பதியப்பட்டுள்ள குடும்ப அட்டைகள் அ/ எண் வாரியாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அ/ எண் வரிசையின் அடிப்படையில் குடும்ப அட்டைகளுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படவுள்ளது. எந்த குடும்ப அட்டைகளுக்கு எந்த தேதியில் இலவச பொங்கல் பொருள்கள் அடங்கிய பைகள் விநியோகிக்கப்படும் என்ற விவரம் நியாயவிலை அங்காடிகளில் ஒட்டப்பட்டிருக்கும். தங்களுக்கு உரிய தேதியில் பைகள் பெற இயலாதவர்கள் ஜனவரி 13, 14ஆம் தேதிகளில் அதனை பெற்றுக் கொள்ளலாம்.
எனவே நகர்ப்புறங்களில் உள்ள அட்டைதாரர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேதியினை கடையில் ஒட்டப்பட்ட அறிவிப்பிலிருந்து அறிந்து கொண்டு அந்த தேதியில் நியாயவிலை அங்காடிக்குச் சென்று இலவச பொங்கல் பொருள்கள் அடங்கிய பைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அட்டைதாரர்கள் வேறு தினங்களில் சென்று கடைகளில் கூட்டமாக கூடுவதை தவிர்க்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இலவச பொங்கல் பொருள்கள் விநியோகம் தொடர்பாக கீழ்க்கண்ட தொலைபேசி எண்களுக்கு அட்டைதாரர்கள் புகார்கள் ஏதுமிருப்பின் தெரிவிக்கலாம். சென்னை தெற்கு 28551026, சென்னை வடக்கு 28551028, முதுநிலை மண்டல மேலாளர் (தெற்கு) 28353754, முதுநிலை மண்டல மேலாளர் (வடக்கு) 28352439, இணைப்பதிவாளர் (வடக்கு) 23651722, இணைப்பதிவாளர் (தெற்கு) 23651721
பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்கள் சிரமமின்றி இலவச பொங்கல் பொருட்களைப் பெற்றுச் செல்ல ஆவன செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார்.