திருமங்கலம் தொகுதியில் 33 கிராமங்கள் பதற்றமானவை: ஏ.டி.‌ஜி.‌பி ராஜே‌ந்‌திர‌ன்

செவ்வாய், 30 டிசம்பர் 2008 (10:06 IST)
திருமங்கலம் தொகுதியில் உள்ள 234 கிராமங்களில், 33 கிராமங்கள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன என்று சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவ‌ல்துறை இய‌க்குன‌ர் (ஏ.ி.ி.ி.) ராஜேந்திரன் தெரிவித்து‌ள்ளா‌ர்.

மதுரை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், திருமங்கலம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் 2 நாட்களாக சிறு, சிறு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால், பாதுகாப்பு பணிக்கு கூடுதலாக 1,200 காவல‌ர்க‌ள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். தொகுதிக்குள் 11 காவல் நிலையங்கள் உள்ளன. ஒரு காவல் நிலையத்துக்கும் ஒரு காவ‌ல்துறை துணை க‌ண்கா‌ணி‌‌ப்பாள‌ரு‌ம் (டி.எ‌ஸ்.‌பி), 2 காவல் நிலையங்களுக்கு ஒரு காவ‌‌ல்துறை கூடுத‌ல் துணை க‌ண்கா‌ணி‌ப்பாளரு‌ம் (ஏ.டி.எ‌ஸ்.‌பி.) கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் கூடுதலாக 3 வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. 5, 6, 7 தேதிகளில் முக்கிய பிரமுகர்களின் பிரசாரங்கள் உள்ளன. திருமங்கலம் தொகுதியில் உள்ள லாட்ஜ்கள், திருமண மகால்கள் மற்றும் தங்கும் இடங்களில் உள்ள வெளியூர்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள்.

கடந்த 2 நாட்களாக நடந்த பிரச்சனைகளில் தி.மு.க.வினர் மீது 9 வழக்குகளும், அ.தி.மு.க.வினர் மீது 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. தொகுதி முழுவதும் 3 ஆயிரம் காவல‌ர்க‌ள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

234 கிராமங்களில் 33 கிராமங்கள் பதற்றமானவை என்றும், 190 பூத்களில் 65 பதற்றமானவை எனவும் கண்டறியப்பட்டுள்ளன. இப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே கமாண்டோ படை இயங்கி வருகிறது. மும்பை சம்பவத்துக்கு பிறகு, இப்படையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன எ‌ன்று ராஜேந்திரன் தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்