ஈழ‌த் த‌மிழ‌ர்களு‌க்கு கா‌ங்‌கிர‌ஸ் ஆதரவாக இ‌ல்லையே: சுப.வீரபாண்டியன் ஆதங்க‌ம்

திங்கள், 29 டிசம்பர் 2008 (10:23 IST)
'விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் சத்திய மூர்த்தி பவனை இடிக்க சொல்லியிருக்க மாட்டார். அவர் வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர்' என்றுதான் பேசினேன். ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு குரலை காங்கிரஸ் கொடுக்கவில்லை என்பதே என் ஆதங்கம். எனவே, காங்கிரஸ் கட்சியினர் என்மீது வருத்தம் கொள்ளத் தேவையில்லை எ‌ன்று திராவிட இயக்க தமிழர் பேரவை பொது செயலாளர் சுப.வீரபாண்டியன் கூ‌றியு‌ள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், கடந்த 26ஆ‌ம் தேதி விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் நான் ஆற்றிய உரையை ஒரு நாளேடு உள்நோக்கத்துடன் திரித்து வெளியிட்டுள்ளது. அதனை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.வி.தங்கபாலு, சத்தியமூர்த்தி பவனை நான் இடிக்கச் சொன்னதாகவும், தைரியம் இருந்தால் நாள், நேரம் குறித்து அதனை இடிக்க வரும்படியும் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

விடுதலை சிறுத்தைகளின் தலைவர் திருமாவளவன் ஒருநாளும் சத்தியமூர்த்தி பவனை இடிக்கச் சொல்லியிருக்க மாட்டார், அவர் வன்முறையில் நம்பிக்கை இல்லாதவர். அக்கட்டிடத்திற்கு ஒரு ஊறும் இதுவரை ஏற்படவில்லை என்பதே அதற்கு சாட்சி என்றுதான் நான் பேசினேன். அடுத்த கட்சியின் அலுவலகத்தில் அனுமதி இல்லாமல் உள்நுழைவதே அநாகரிகம் என்று கருதுபவன் நான்.

என்றைக்கும் மதவாத சக்திகளிடம் நாடு சிக்கிக்கொள்ளக் கூடாது என்ற திராவிட இயக்க சிந்தனை உடையவன் நான். ஈழத்தமிழர்களுக்கு ஏற்ற ஆதரவு குரலை காங்கிரஸ் கட்சி கொடுக்கவில்லை என்பதே என் ஆதங்கம். எனவே தங்கபாலுவும், காங்கிரஸ் கட்சியினரும் என் மீது வருத்தம் கொள்ள தேவையில்லை எ‌ன்று சுப.‌வீரபா‌ண்டிய‌ன் கூ‌றியு‌ள்ளா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்