ஜெயலலிதா இப்போது ‌கண்ணீர் வடிப்பது ஏன்? கருணா‌நி‌தி

திங்கள், 29 டிசம்பர் 2008 (10:06 IST)
''தொழிலாளர்களை சிறையில் வைத்து பூட்டிய ஜெயலலிதா, தொழிலாளர்களுக்காக வடிக்கிற கண்ணீருக்கு பெயர் நீலிக்கண்ணீ‌ர்'' என்று முதலமை‌ச்ச‌ர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள கேள்வி-பதில் அறிக்கை:

webdunia photoFILE
விரைவு போக்குவரத்துக் கழக பேரு‌ந்துக‌ள், பிற போக்குவரத்துக் கழகங்களுக்கு அளிக்கப்படுவதாகவும், ‘இது தனியார்களை ஊக்கப்படுத்துகிற முயற்சி' என்றும், தொழிலாளர்களை பழிவாங்க கூடாதென்றும் ஜெயலலிதா கூறியுள்ளாரே?

அடேடே, ஜெயலலிதாவா தொழிலாளர்களுக்காக கண்ணீர் விடுகிறார்? தொழிலாளர்கள், அரசு அலுவலர்கள் பெறவேண்டிய போனசை மறுத்தவர், அலுவலர்களும், தொழிலாளர்களும் கோரிக்கை வைத்தபோதெல்லாம் அவர்களை சிறையில் பூட்டி, அரசுக்கு வருகிற வருமானம் முழுவதும் அரசு ஊழியர்களுக்கே 96 சதவீதம் போகிறது என்று பேசியவர், இன்று தொழிலாளர்களுக்காக வடிக்கிற கண்ணீருக்குப் பெயர்தான் அசல் நீலிக்கண்ணீர். பிற போக்குவரத்துக்கழகத்துக்கு விரைவுப் பேரு‌ந்துகளை அளிப்பது என்ற பிரச்னையே எழவில்லை. இவர் ஏன் தலையைப் பிய்த்துக் கொண்டு இப்படித் தாண்டவமாடுகிறார்?

பொய்யோ, புளுகோ, புரட்டோ எதுவானாலும், அதை ஜெயலலிதா ஓர் அறிக்கையாக கொடுத்தால், எல்லாப் பத்திரிகைகளும் அதைப் போட்டுவிட்டுதான் மறுவேலை பார்க்கிறார்களே அது ஏன்?

மோரில் விஷம் கலந்து கொடுத்து, தனது கணவர் எம்.ஜி.ஆரை ஜானகி கொன்றுவிட்டதாக இதே ஜெயலலிதா கொடுத்த அறிக்கையையும், 'இல்லை-இல்லை, ஜெயலலிதாதான் எம்.ஜி.ஆருக்குப் பாலில் விஷம் கலந்து கொடுத்துவிட்டார்' என்று ஜானகி கொடுத்த அறிக்கையையும் வெளியிட்ட ஏடுகள்தானே அவைகள். அந்த ஏடுகள், உண்மையைத் தெரிந்து கொண்டு வெளியிட முனையாமல் ''அம்மா'' அறிக்கையை வெளியிடுவதைப் பற்றி ஆச்சரியப்படுகிறீர்கள். எதிர்க்கட்சித் தலைவராயிற்றே, அவர் என்ன உளறினாலும் ஏடுகள் வெளியிட்டுதானே தீரவேண்டியிருக்கிறது.

அண்மையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், தமிழகத்துக்கு ரூ.3 ஆயிரத்து 34 கோடி செலவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதே?

ஆம். ரூ.1,530 கோடி செலவில் சென்னை துறைமுகத்தில் இருந்து மதுரவாயில் வரை பறக்கும் சாலை அமைக்கும் திட்டம், ரூ.922 கோடி செலவில் சென்னையில் இருந்து திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் 124 கிலோ மீட்டர் நீள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழி சாலையாக மாற்றும் திட்டம், ரூ.582 கோடியில் கோவையில் இருந்து மேட்டுப்பாளையம் வரை 50 கிலோ மீட்டர் நீள சாலையை நான்கு வழி சாலையாக மாற்றும் திட்டம் என ரூ.3 ஆயிரத்து 34 கோடி செலவில் ஆன 3 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒரே கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

துப்புரவு பணியாளர்கள் தோல் தொழில் செய்வோர் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களின் குழந்தைகள் குலத்தொழிலில் ஈடுபடுவதை தடுக்கவும், அவர்கள் கல்வி கற்க வசதியாகவும், கல்வி உதவி தொகைகள் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதே?

மத்திய அரசின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. குறிப்பாக துப்புரவு பணியாளர்கள், தோல் தொழில் செய்வோர் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்வது மிகவும் அடிப்படையானதும் அவசியமானது மாகும். துப்புரவு தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு 10ம் வகுப்பு வரை படிப்புக்கான உதவி தொகை வழங்கும் திட்டம் ஒன்று தி.மு.க ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் துப்புரவு தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கு, அவர்களது சாதி, மதம் மற்றும் வருமான வரம்பை கணக்கில் கொள்ளாமல் உதவி தொகை வழங்கப்படுகிறது.

விடுதியில் தங்காது பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.40ம், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வகுப்பு வரை ரூ.60ம், 9ம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்புக்கு ரூ.75ம் உதவி தொகையாக வழங்கப்படுகிறது.

விடுதியில் தங்கி படிப்பவர்களுக்கு 3ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையில் மாதம் ரூ.300ம், 9 மற்றும் பத்தாம் வகுப்பு பயில்வோருக்கு மாதம் ரூ.375ம் வழங்கப்படுகிறது. மேலும், உயர்க் கல்வி சிறப்பு உதவி தொகை திட்டத்தின் கீழ் இளங்கலை பட்டப் படிப்புக்கான ஆண்டொன்றுக்கு ரூ.6 ஆயிரத்து 500ம், முதுகலை பட்டப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி படிப்புக்கான ஆண்டொன் றுக்கு ரூ.7 ஆயிரமும் வழங்கப்படுகிறது.

மருத்துவ படிப்பு பயிலும் மாணவ, மாணவிகளை பொறுத்த வரை ஆண்டொன்றுக்கு 7 ஆயிரம் ரூபாயில் 75 சதவீத தொகை மானியமாகவும், 25 சதவீத தொகை கடனாகவும் வழங்கப்படுகிறது.

துப்புரவு பணி, தோல் தொழில் செய்யும் அருந்ததியர் சமுதாயத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் உரிய பங்கீடு கிடைக்கும் வகையில், அவர்களுக்கு 3 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க சட்டம் இயற்ற அரசு முடிவு செய்துள்ளது எ‌ன்று கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.