சென்னையில் அயல்நாடு வாழ் இந்தியர்கள் மாநாடு: குடியரசுத் தலைவர், பிரதமர் பங்கேற்பு
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (20:34 IST)
சென்னையில் ஜனவரி 7 முதல் 9ஆம் தேதி வரை அயல்நாடு வாழ் இந்தியர்கள் ("பிரவாசி பாரதிய திவாஸ்") மாநாடு நடைபெற உள்ளது. இதில் குடியரசுத்தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சென்னையில் இன்று செய்தியளார்களுக்குப் பேட்டியளித்த அயல்நாடு வாழ் இந்தியர் விவரங்களுக்கான அமைச்சர் வயலார் ரவி இத்தகவலைத் தெரிவித்துள்ளார்.
மேலும், சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7, 8, 9 ஆகிய நாட்களில் அயல்நாடு வாழ் இந்தியர்களின் 7-வது மாநாடு நடைபெற உள்ளது.
இந்த அயல்நாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் ஜனவரி 8ஆம் தேதி கலந்து கொண்டு துவக்கவுரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து 9ஆம் தேதி குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கலந்து கொண்டு நிறைவுரை நிகழ்த்துகிறார்.
இது வரை 6 அயல்நாடுவாழ் இந்தியர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. தற்போது சென்னையில் நடக்கவிருப்பது 7-வது மாநாடு ஆகும். இதுவே சென்னையில் நடக்கும் முதல் மாநாடும் கூட. இந்த மாநாட்டில் சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
தவிர, மாநாட்டில் முக்கிய கூட்டங்களில் 3 மாநில முதல்வர்கள் உட்பட 20 அமைச்சர்கள் சிறப்புரையாற்ற உள்ளனர். குறிப்பாக 9ஆம் தேதி நடைபெறவுள்ள மாநில முதல்வர்களிடையேயான சிறப்பு கூட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்கிறார்.
இந்த மாநாட்டில் 60 நாடுகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களைப் பகிர்ந்துக்கொள்ள உள்ளனர்.
வர்த்தகம் மற்றும் தொழில் துறை கண்காட்சியும் நடைபெறவுள்ளது. மேலும் ஆஸ்ட்ரேலியா, கனடா, ஜப்பான், மலேசியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த அயல்நாடு வாழ் இந்தியத் தொழிலதிபர்கள் ஒரே இடத்தில் கூட உள்ளனர்.
இதன் மூலம் இந்தியத் தொடர்புகள் பெருகி, வர்த்தக, பொருளாதார முன்னேற்றங்கள் ஏற்பட பெருமளவு வாய்ப்புகள் உள்ளன. மேலும் 15 மாநில அரசுகளின் பிரநிதிகளும் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்.
வர்த்தகம், முதலீடு, கல்வி கலாசாரம், மொழி, பொருளாதாரம், பத்திரிகை மற்றும் பொழுதுபோக்கு, சுகாதாரம், மகளிர் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அடிப்படையில் ஆரோக்கியமான ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெறவுள்ளன.
மேலும் ஆப்பிரிக்க, ஆசிய பசிபிக், கனடா, கரீபியன், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்காக மண்டல அளவிலான கலந்தாய்வு நிகழ்வுகளும் நடைபெறும்.
முக்கிய துறைகளில் முதலீடு வாய்ப்புகளை அறிந்து கொள்ளும் வண்ணம் நேரடி ஆலோசனை சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வம்சாவளியினருக்கான பிரதமரின் உலகளாவிய ஆலோசனைக் குழு, வெளிநாடு வாழ் இந்தியர்களின் நன்கொடைகளை ஒழுங்குபடுத்தி மேம்பாட்டு நடவடிக்கைளுக்குச் சரியாக பயன்படுத்த வழி செய்யும் இந்தியா வளர்ச்சி அறக்கட்டளை, இந்திய வம்சாவளியினர் மற்றும் அயல்நாடு வாழ் இந்தியர்கள் பல்கலைக்கழகம், அயல்நாட்டில் வேலை வாய்ப்பு ஏற்படுத்துவதற்கான கவுன்சில், தொடர்பான பல்வேறு புதிய முயற்சிகளுக்கான அறிவிப்புகளும் இந்த மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது முதல் 26 வயதுக்குள்ளான 235 இளைஞர்கள் இந்திய மொழி, கலை, கலாசாரம், பண்பாடு உள்ளிட்டவற்றை தாங்களே கலந்து கொண்டு நேரடியாகத் தெரிந்து கொள்ளும் பொருட்டு "இந்தியாவைத் தெரிந்து கொள்ளுங்கள்" திட்டத்தின் கீழ் இந்தியா வருவது சிறப்பம்சமாகும்.
இந்தியர்கள் யாரும் வேலைத் தேடி ஈராக் நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. தீவிரவாதிகளால் ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆளாகாமல் இருக்கவே இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது கூட, ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் பிடியில் உள்ள விழுப்புரத்தை சேர்ந்த சைமன் என்பவரை விடுவிக்க மத்திய அயல்நாடு வாழ் இந்தியர் விவகார அமைச்சகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்று அமைச்சர் வயலார் ரவி கூறினார்.