சத்தி வனப்பகுதியில் காட்டுபன்றியை வேட்டையாடிய 4 பே‌ர் கைது

வெள்ளி, 26 டிசம்பர் 2008 (13:05 IST)
சத்தியமங்கலம் வனப்பகுதியில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப்பகுதி கடந்த நவம்பர் மாதம் மூன்றாம் தேதி முதல் வனவிலங்குகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வனப்பகுதியில் தமிழ்நாடு அதிரடிப்படை, வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று நள்ளிரவு ரோந்து பணி சென்றுகொண்டிருந்தபோது திம்பம் கொண்டை ஊசி வளைவு இருபத்தி நான்கு, இருபத்தி ஐந்து இடையில் ஒரு கும்பல் துப்பாக்கியுடன் நின்றிருந்தனர். இந்த கும்பலை ரோந்து குழுவினர் சுற்றிவளைத்தனர். அவர்களிடம் சென்று பார்‌‌த்தபோது அங்கிருந்த காட்டு பன்றியை வேட்டையாடியது தெரியவந்தது.

இதையடு‌த்து அவ‌ர்களை கைது செ‌ய்த வன‌த்துறை‌யின‌ர், அவ‌ர்க‌ளிட‌ம் இரு‌ந்த கார், துப்பாக்கியை கை‌ப்பற்றினர். விசாரணையில், இவர்கள் எடப்பாடியை சேர்ந்தவர் என்றும், இவர்கள் பெயர் ராஜேஷ்குமார் (33), தமிழ்செல்வன் (44), கண்ணன் (37), அங்கப்பன் (36) என தெரியவந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்