தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசினால் சட்டப்படி நடவடிக்கை: கருணாநிதி எச்சரிக்கை
வெள்ளி, 26 டிசம்பர் 2008 (09:55 IST)
''தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ள முதலமைச்சர் கருணாநிதி, இந்த எச்சரிக்கை எல்லோருக்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
பந்தப்புளி ஆலயப் பிரவேசம்; வெற்றியடைந்ததற்கு முழு முதல் காரணம், மார்க்சிஸ்ட் நடத்திய போராட்டம்தான் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள முதல்வர், உண்மைகளை ஒப்புக் கொள்வதில் எந்தவிதத் தயக்கமும் இல்லை. அவர்கள் போராட்டம் நடத்தியபோது பாலபாரதி எம்.எல்.ஏ. உட்பட அனைவரும் கைது செய்யப்பட்டு, அதன் விளைவாகவே இந்த வெற்றி கிடைத்தது என்பது மட்டும் முழு உண்மையல்ல. ஏனெனில் பந்தப்புளி ஆலய பிரவேசத்துக்காக அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது; கைது செய்யப்பட்டு அன்றைக்கே விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த உண்மையை தீக்கதிர் உள்ளிட்ட ஏடுகள் வெளியிடத் தவறிவிட்டதுதான் மனத்திற்கு சற்று சங்கடம். அனைத்து சாதியினருக்கும் ஆலயங்களில் அர்ச்சனை செய்யவே உரிமையளித்து ஆணை பிறப்பித்துள்ள இந்த ஆட்சியில், ஆலயப்பிரவேசம் மட்டும் தடுக்கப்பட்டு விடுமா என்ன?
மதுரை மாவட்டத்தில், நாட்டாமங்கலம், பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தில் கொட்டகச்சியேந்தல் ஆகிய ஊர்களில் பஞ்சாயத்து தேர்தலே நடத்த முடியாமல் இருந்ததை மாற்றியமைத்துப் புதுவிடியல் கண்டது, பெரியார் நினைவு சமத்துவபுரம் பல கண்டது. இந்த ஆட்சியின் புரட்சிதான் என்பது அனைவரும் அறிந்ததாயிற்றே என்று கூறியுள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சனையில் விடுதலைப்புலிகளை தி.மு.க. ஆதரிக்கிறதா? என்ற மற்றொரு கேள்விக்கு, இலங்கைத் தமிழர் பாதுகாப்புதான் தி.மு.க.வின் குறிக்கோள். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரிப்போரை தி.மு.க. ஆதரிக்கவில்லை. அவ்வாறு ஆதரித்துப் பேசினாலும், செயல்பட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தி.மு.க. ஆட்சி தயக்கம் காட்டாது. இந்த எச்சரிக்கை எல்லோருக்கும் பொருந்தும் என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.