சட்டக்கல்லூரி மாணவர்கள் விவகாரம் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
புதன், 24 டிசம்பர் 2008 (09:51 IST)
மருத்துவமனையில் கைது செய்யப்பட்ட சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரி மாணவர்கள் 2 பேரை மீண்டும் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அம்பேத்கர் அரசு சட்டக்கல்லூரியில் கடந்த நவம்பர் 12ஆம் தேதி இரு தரப்பு மாணவர்களுக்கிடையே நடந்த மோதலின் போது படுகாயமடைந்த பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாத்துரை ஆகிய 3 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
இந்த நிலையில், பாரதி கண்ணன், ஆறுமுகம் ஆகிய 2 மாணவர்கள் டிசம்பர் 10ஆம் தேதி திடீரென கைது செய்யப்பட்டனர்.
இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் மாணவர்கள் முழுவதும் குணமடையாத நிலையில் திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்களை மீண்டும் மருத்துவமனையில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுகுணா, மாணவர்கள் உடல் நிலை குறித்து மறுஆய்வு செய்ய நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மருத்துவர்கள் மார்த்தாண்டம், ஜான் ரெஜினால்டு ஆகியோர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் மாணவர்களை மீண்டும் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இரண்டு மாணவர்களையும் நாளை முதல் அரசு பொது மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, தொடர்ந்து 30 நாட்கள் அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.