மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த 5 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
திருமங்கலம் இடைத்தேர்தலில் போட்டியிடுவோர் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்வது நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இதில் 5 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இங்கு தி.மு.க சார்பில் லதா அதியமானும், அ.இ.அ.தி.மு.க சார்பில் முத்துராமலிங்கமும், தே.மு.தி.க சார்பில் தனபாண்டியனும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பத்மநாபனும் வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இதில் தி.மு.க, அ.இ.அ.தி.மு.க., தே.மு.தி.க, சமத்துவ மக்கள் கட்சி உள்பட 31 பேர் மனுக்கள் ஏற்கப்பட்டதாகவும், சரியாக மனுக்களை பூர்த்தி செய்யாததால் 5 பேர் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.
வேட்பு மனுக்களை விலக்கிக் கொள்ள வரும் 25ஆம் தேதி கடைசி நாளாகும். 26ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அடுத்த மாதம் 9ஆம் தேதி வாக்குப்பதிவும், 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறுகிறது.