மதுரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆன்லைன் கடவுச்சீட்டு வசதி
திங்கள், 22 டிசம்பர் 2008 (17:03 IST)
மதுரை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் மாவட்ட கடவுச்சீட்டு மையத்தில் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக அம்மாவட்ட கடவுச்சீட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டத்தை சேர்ந்த கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் தமது விண்ணப்பங்களை நிரப்பி, நேரடியாக மாவட்ட கடவுச்சீட்டு மையத்தில் அளிக்கலாம்.
இந்த விண்ணப்பங்கள் மறுநாள் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டு பரிசீலக்கப்படும். மாவட்ட கடவுச்சீட்டு மையத்தில் எந்த தாமதமுமின்றி விண்ணப்பங்கள் உடனுக்குடன் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுவிடுகின்றன.
எனவே, மதுரை மாவட்ட கடவுச்சீட்டு விண்ணப்பதாரர்கள் கடவுச்சீட்டு அலுவலகத்திற்கு செல்லாமல், அந்த நெரிசலைத் தவிர்த்து கடவுச்சீட்டு மையத்திற்கே சென்று விண்ணப்பங்களை அளித்துவிடலாம்.
மாவட்ட கடவுச்சீட்டு மையத்தில் வரைவோலை (டிமாண்ட் டிராப்ட் ) வாயிலாக கட்டணத்தை செலுத்த முடியும். கடவுச்சீட்டு அலுவலகம், மதுரை என்ற பெயருக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கியிலிருந்து பெறப்பட்ட, மதுரையில் செலுத்தக்கூடிய வரைவோலையை அளிக்கலாம்.
தட்கல், கடவுச்சீட்டு நகலைப் பெறுவதற்கான விண்ணப்பங்களை கடவுச்சீட்டு அலுவலகத்தில் நேரடியாக அளிக்க வேண்டும் என்றும் மதுரை கடவுச்சீட்டு அலுவலர் தெரிவித்துள்ளார்.