ராஜீவ்காந்தி, காங்கிரசாரை விமர்சனம் செய்த இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி, மணியரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் ஆனூர் ஜெகதீசன் தலைமையில் இன்று சத்திய மூர்த்தி பவன் முன்பு போராட்டம் நடத்த திரண்டனர். அவர்களை இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறையினர் ஏராளமாகக் குவிக்கப்பட்டிருந்தனர்.
இதைப் பார்த்து ஆவேசம் அடைந்த காங்கிரசார் சில பேர் அங்கு ஓடி வந்து 'உருவ பொம்மை எரிக்க எப்படி அனுமதிக்கலாம்' என்று கூறி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆவேசம் அடைந்த காங்கிரசார் சிலர் காவல்துறையினருக்கு எதிராக கோஷம் போட்டபடியே சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது திடீரென்று காவல்துறையினர் மீதும் சத்திய மூர்த்தி பவன் மீதும் சரமாரி கற்கள் வீசப்பட்டது. இதைத் தொடர்ந்து காங்கிரசாரும், பெரியார் தி.க.வினரும் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் காங்கிரஸ் மாநகராட்சி உறுப்பினர் நாகராஜ் காயம் அடைந்தார். இந்த மோதலினால் சத்திய மூர்த்தி பவன் போர்க்களம் போல் காட்சி அளித்தது.
ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மறியல் நீடித்ததால் அங்கு காவல்துறையினர் அதிகளவு குவிக்கப்பட்டனர். பின்னர் கராத்தே தியாகராஜன் தலைமையில் அண்ணாசாலை நோக்கி ஊர்வலமாக சென்ற காங்கிரசாரை காவல்துறையினர் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். பின்னர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இதற்கிடையே உருவ பொம்மை எரித்த பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த 75 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களை நியூ கல்லூரி எதிரில் உள்ள சமூக கூடத்தில் வைக்கப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.