நீரிழிவால் உறுப்பு இழந்தோருக்கும் ஊனமுற்றோருக்கான சலுகை?
சனி, 20 டிசம்பர் 2008 (12:49 IST)
சர்க்கரை நோயால் உடல் உறுப்புகளை சிறுவயதிலேயே இழந்தவர்களுக்கும், ஊனமுற்றோருக்கு அளிக்கப்படும் அரசின் சலுகைகள் வழங்குவது குறித்து தமிழக அரசு தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், அதுபற்றிய அறிவிப்பு நிதிநிலை அறிக்கைக் கூட்டத்தொடரில் வெளியிடப்படும் என்றும் மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நேற்று `நீரிழிவு நோய்-2008' எனும் சர்க்கரை நோய் குறித்த விழிப்புணர்வுக் கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பேசுகையில் அவர் இதனை அறிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: முன்பெல்லாம் கிராமங்களில் சர்க்கரை நோய் என்றால் என்னவென்று தெரியாத நிலை இருந்தது. ஆனால், தற்போது உழைப்பாளிகளுக்கும், தொழிலாளர்களுக்கும் கூட சர்க்கரை நோய் வருகிறது.
சாதாரண ஏழை மக்கள், அன்றாட தினக்கூலிகளால் 50 முதல் 100 ரூபாய் வரை இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதற்காக செலவிட முடியாது என்பதைக் கருத்தில் கொண்டுதான், அரசு மருத்துவமனைகளில் சர்க்கரை நோயாளிகளுக்கு இலவசமாக இன்சுலின் ஊசி போடும் திட்டத்தை முதல்வர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசு அறிமுகப்படுத்தி, செயல்படுத்தப்பட்டு வருவதாக் அமைச்சர் பன்னீர் செல்வம் கூறினார்.
சர்க்கரை நோயின் தாக்கமானது, நன்றாக ஆண்டனுபவித்த வயதானவர்களுக்கு வருவதில் பெரிய பாதிப்பில்லை. அவர்கள் கட்டுப்பாடான உணவு முறைகளையும், மருத்துவ சிகிச்சையையும் எடுத்துக் கொண்டு உயிர் வாழலாம். ஆனால், குழந்தைகளுக்கு, சில குழந்தைகள் பிறக்கும் போதே சர்க்கரை நோய் இருப்பது மிகவும் கொடுமையானது என்றார் அமைச்சர்.
குழந்தைகளுக்கு சர்க்கரை நோய் காரணமாக கை, கால் போன்ற உறுப்புகளை இழக்க நேரிடும் பட்சத்தில், அவர்களுக்கும் பிறவியிலேயே ஊனமுற்றோருக்கு அளிக்கப்படும் அரசின் சலுகைகளை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு வரும் நிதிநிலை கூட்டத்தொட்ரிலோ அல்லது அதற்கு முன்னரோ வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
சர்க்கரை நோயால் அவதியுற்று, ஊனமுற்ற குழந்தைகள், அவர்களின் பெற்றோரிடம் இருந்து வந்த ஏராளமான கோரிக்கைகளை கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த அறிவிப்பை வெளியிட இருப்பதாகவும் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் கூறினார்.
இந்த சர்க்கரை நோய் விழிப்புணர்வுக் கண்காட்சியை பயன்படுத்திக் கொண்டு, மக்கள் அந்நோயில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், இதற்கு ஏற்பாடு செய்துள்ள டாக்டர் மோகன் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவமனையின் தலைவர் வி. மோகனுக்கு தமது பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறினார்.
முன்னதாக, நீரிழிவு நோய் விழிப்புணர்வு கண்காட்சி-2008'-ஐ குத்துவிளக்கேற்றி அமைச்சர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் டாக்டர் மோகன் நீரிழிவு நோய் சிறப்பு மையத்தின் தலைவர் வி. மோகன், மையத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ரெமா மோகன், மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் வி.கே. சுப்புராஜ், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் எஸ். ராமச்சந்திரன், இந்திய மருத்துவக் கழகத்தின தமிழகப் பிரிவு செயலாளர் டாக்டர் ரவி சங்கர், டாக்டர்கள் அஞ்சனா, ரஞ்சித் உன்னிகிருஷ்ணன், ரேகா தங்கப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.