மதுரை மாவட்டம், திருமங்கலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ம.தி.மு.க.வைச் சேர்ந்த வீர.இளவரசன் மாரடைப்பால் இறந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு ஜனவரி 9ஆம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது.
அ.இ.அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முத்துராமலிங்கமும், தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் தனபாண்டியனும் கடந்த 18ஆம் திருமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் அலுவலர் சேதுராமனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
வள்ளலார் இயக்கத்தை சேர்ந்த ராமசாமி, அம்பேக்தர் ஜனசக்தி இயக்கத்தை சேர்ந்த பாண்டிகுமார் ஆகியோர் உதவி தேர்தல் அலுவலர் சேதுராமனிடம் நேற்று மனுதாக்கல் செய்தனர். இவர்களுடன் சேர்த்து மொத்தம் 12 பேர் இதுவரை மனுதாக்கல் செய்துள்ளனர்.
மனு தாக்கல் செய்ய வரும் திங்கட்கிழமை கடைசி நாளாகும். 23ஆம் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 25ஆம் தேதி மனுக்களை திரும்ப பெற கடைசி நாள். ஜனவரி 9ஆம் தேதி வாக்குப்பதிவும், 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது.
இந்த தேர்தலில் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்யும் போதும், பிரசாரத்தின் போதும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து தேர்தல் ஆணையம் கடும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.