இயக்குனர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டுமென கூச்சல் எழுப்புவோரையெல்லாம் ஆறுதல்படுத்தும் வகையில் தமிழக அரசு தமிழீழ ஆதரவுக்குரலை நசுக்கமுனைவது ஜனநாயகத்திற்கு எதிரான போக்காகும் என்று தொல். திருமாவளவன் குற்றம்சாற்றியுள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் "தமிழீழச் சிக்கல்' குறித்து உரையாற்றிய திரைப்பட இயக்குனர் சீமான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோரை தமிழீழ விடுதலைப் புலிகளை ஆதரித்து பேசியதாகவும், ராஜீவ்காந்தி, இந்திராகாந்தி ஆகியோரின் படுகொலைகள் தொடர்பாக விமர்சித்து பேசியதாகவும் அவர்கள் இருவரின் மீது எழுந்த புகார்களையடுத்து திடீரென கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைப்பதாகவும், இந்திய இறையாண்மையை அவமதிப்பதாகவும் மேற்சொன்ன இருவரின் மீதும் எழுந்த குற்றச்சாற்றுகள் எழுந்துள்ள போதிலும் அவர்தம் கருத்துரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை நிலையாகும்.
மேலும், இயக்குனர் சீமான் கார் திடீரென தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. இந்தப் போக்கை விடுதலைச்சிறுத்தைகள் மிக வன்மையாகக் கண்டிக்கிறது. தீவைப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழர் விரோதக் கும்பலை உடனடியாக தமிழக அரசு கைது செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறோம்.
சீமான், கொளத்தூர் மணி ஆகியோரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் சிறைப்படுத்த வேண்டுமெனவும் சிலர் கூக்குரல் எழுப்புகின்றனர். இவ்வாறு கூச்சல் எழுப்புவோரை யெல்லாம் ஆறுதல்படுத்தும் வகையில் தமிழக அரசு தமிழீழ ஆதரவுக்குரலை நசுக்கமுனைவது ஜனநாயகத்திற்கு எதிரான போக்காகும்.
ஆகவே, இயக்குனர் சீமான் மற்றும் கொளத்தூர் மணி ஆகியோரின் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற்று, அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று தொல்.திருமாவளவள் கேட்டுக் கொண்டுள்ளார்.