ரேசன் கடையை பூட்டாமல் சென்ற ஊழியர்

வெள்ளி, 19 டிசம்பர் 2008 (13:40 IST)
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே செல்லம்பாளையத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொருட்களை வழங்கிய பின், ஊழியர்கள் பூட்டாமல் விட்டுச் சென்று விட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நியாயவிலைக் கடையில் அப்பகுதியைச் சுற்றிலும் சுமார் பத்து கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ரேசன் பொருட்களை வாங்கிச் செல்கிறார்கள்.

இந்த ரேசன் கடை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளை தவிர மற்ற நாட்களில் காலை பத்து மணியில் இருந்து மாலை ஆறு மணிவரை திறந்திருக்கும்.

அதன்பின் அதன் விற்பனையாளர் ரவி கடையை பூட்டிவிட்டு சென்று விடுவார். நேற்று இரவு பத்து மணிக்கு மேல் தங்கள் விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்ச விவசாயிகள் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரேசன் கடையில் லைட் எரிந்து கொண்டிருந்தது.

இதைப்பார்த்த விவசாயிகள் திருடர்கள் புகுந்து விட்டதாகக் கருதி, ஊர் மக்களிடம் கூறினார். உடனே ஊர்மக்கள் ஒன்றுகூடி தடி, கட்டையுடன் கும்பலாக ரேசன்கடைக்குள் புகுந்தனர்.

ஆனால் ரேசன் கடைக்குள் யாரும் இல்லை. இரவு முழுவதும் ஊர் மக்கள் ரேசன் கடையை பாதுகாத்தனர். இதுபற்றி விசாரித்த போது, ரேசன்கடையின் விற்பனையாளர் ரவி குடிபோதையில் கடையை பூட்டாமல் விட்டுசென்றது தெரியவந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்